கோவன் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) மாலை பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டதில் ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்பர் சிராங்கூன் சாலையில் மாலை 4.30 மணியளவில் விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஐந்து பேர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் சிறு காயங்களுக்காக பரிசோதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர் என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மாலை 4.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சென்றபோது, ஐந்தில் மூன்று சாலைத் தடங்கள் முழுவதும் எண்ணெய், கண்ணாடி, உடைந்த வாகனப் பாகங்கள் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது.
சாலையின் இடது தடத்தில் கோ-அஹெட் சிங்கப்பூர் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகில் கருப்பு நிற கார் ஒன்று காணப்பட்டது. அதன் முன்பகுதி சேதமுற்றிருந்தது.
பேருந்தில் இருந்த பயணிகள் மெதுவாக அதிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மாலை 4.50 மணியளவில் இரண்டு குடிமைத் தற்காப்புப் படை தீயணைப்பு வாகனங்களும் இரண்டு அவசர மருத்துவ வாகனங்களும் சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தன.
சம்பவ இடத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட பலருக்குக் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களில் ஒருவர், “நான் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ என் காரின் பின்னால் மோதியதுபோல் உணர்ந்தேன்.
“நான் என் காரைவிட்டு வெளியே வந்தபோது, குறைந்தது மூன்று கார்களும் ஒரு பேருந்தும் விபத்தில் சிக்கியதைக் கண்டேன்,” என்று கூறினார்.

