ஆயர் ராஜா விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (ஜூலை 10) பல வாகனங்கள் மோதிக்கொண்டதை அடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
விபத்தைத் தொடர்ந்து விரைவுச்சாலையின் சில தடங்கள் மூடப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
துவாசை நோக்கிச் செல்லும் கிளமெண்டி அவென்யூ 6 வெளிவழியில் நடந்த விபத்து குறித்து வியாழக்கிழமை காலை 11.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சம்பவத்தில் ஒரு லாரி, ஒரு வேன், இரு கார்கள் மோதிக்கொண்டதாகக் காவல்துறை கூறியது.
45 வயதுக் கார் ஓட்டுநரும் வேனை ஓட்டிய 45 வயது ஆடவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அது சொன்னது.
அவர்களில் ஒருவர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கும் மற்றவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
நிலப் போக்குவரத்து ஆணையம், இவ்விபத்து குறித்து காலை 11.15 மணியளவில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. வாகனவோட்டிகள் விரைவுச்சாலையின் முதல் மூன்று தடங்களைத் தவிர்க்கும்படி அது கேட்டுக்கொண்டது.
புவன விஸ்தா வெளிவழி வரையிலும் போக்குவரத்து நெரிசல் நீடிப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

