சிலேத்தார் விரைவுச்சாலையில் பல வாகன விபத்து; ஐவர் மருத்துவமனையில் அனுமதி

சிலேத்தார் விரைவுச்சாலையில் பல வாகன விபத்து; ஐவர் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
db3b8d84-8675-4367-bc95-4065c219a651
விபத்தில் காயமடைந்த ஐவரில் மூவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் இருவர் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர். - படம்: எஸ்ஜி டாக்ஸி டிரைவர்ஸ், சிங்கப்பூரா சேனல்/ ஃபேஸ்புக்

சிலேத்தார் விரைவுச்சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஐவர் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

அப்பர் தாம்சன் சாலைக்கு அருகே புக்கிட் தீமா விரைவுச்சாலை நோக்கி செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் சனிக்கிழமை (மார்ச் 14) காலை அவ்விபத்து நடந்தது.

அதுகுறித்து தங்களுக்கு அன்றைய தினம் காலை 10:05 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

லாரிகளும் கனரக வாகனங்களும் அவ்விபத்தில் சிக்கின.

இரு லாரி ஓட்டுநர்கள் தங்கள் இருக்கைகளில் சிக்கிக்கொண்டனர். மீட்புக் கருவிகளைப் பயன்படுத்திச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் அவர்களை மீட்டனர்.

விபத்தில் காயமடைந்த ஐவரில் மூவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் இருவர் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையின் மூன்று தடங்களையும் மறித்து நின்றதால், லெண்டோர் அவென்யூ வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது அச்சம்பவத்தில் குறைந்தது நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

கூடுதல் விவரங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காவல்துறையை நாடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்