சிங்கப்பூரை முன்னுக்குக் கொண்டுவரும் உறுதி, உணர்வு, ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டுள்ள பெருந்தலைவர்களை வருங்காலத்திற்காக இந்தியச் சமூகத்திலிருந்து உருவாக்க சமூக அமைப்புகள் இணைந்து பங்களிக்கலாம் என்று சட்ட, போக்குவரத்து துணையமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.
முன்னோடி அமைச்சர் எஸ். ராஜரத்னம் போன்ற கடந்தகால இந்தியத் தலைவர்கள், நிகழ்கால இந்தியத் தலைவர்கள் போன்றோர் வருங்காலத்திலும் இருப்பது உறுதிசெய்யப்படவேண்டும் என திரு முரளி, துணையமைச்சராகக் கலந்துகொண்ட முதல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.
“இளம் தலைவர்கள் முன்வரும்படியான ஏற்பாடுகளைச் செய்து அவர்களுக்கு இயன்ற தளங்களை நாம் ஏற்படுத்தித் தந்து, தலைமைத்துவத்திற்கும் ஈடுபாட்டுக்குமான வாய்ப்புகளை வழங்கினால் அவர்கள் சிங்கப்பூரின் தலைவர்களாக உருவெடுப்பர். இது தானாக நடக்கும் ஒன்றல்ல. இதற்கு முன்கூட்டியே நாம் திட்டமிட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தமிழ் முரசின் சமூகக் கருத்தரங்கான ‘தோசை பிரேக்ஃபாஸ்ட் கிளப்’ நிகழ்ச்சியின்போது திரு முரளி, இந்திய சமூக அமைப்பின் தலைவர்கள், இளையரணித் தலைவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 40 பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தக் கருத்துகளை அவர் முன்வைத்தார்.
எஸ்பிஎச் மீடியா கட்டடத்தின் ஒளிப்பதிவு அரங்கில் சனிக்கிழமையன்று (ஜூலை 20) நடைபெற்ற அந்தக் கருத்தரங்கின் நெறியாளராக தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர் செயல்பட்டார். இந்தியச் சமூகத்திற்கு வருங்காலத்தில் காத்திருக்கும் சவால்களை ஒட்டிக் கலந்துரையாடல் நடந்தேறியது.
இரண்டாது முறையாக நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கு, ‘செத்தம் ஹவுஸ்’ (Chatham House) விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்தது. இந்த விதிமுறைகளின்படி பங்கேற்பாளர்கள், கலந்துரையாடலின்போது கூறப்படும் தகவல்களை வெளியிடலாம், ஆனால் தகவல்களை வெளியிடுபவரின் அடையாளத்தை வெளியிடக்கூடாது.
நாட்டின் பொருளியல் முன்னேற்றம், மக்களுக்கான வளர்ச்சியாக இருக்கவேண்டும் என்று கருத்தரங்கின் தொடக்கத்தில் சொன்ன திரு முரளி, மக்கள் மீது முதலீடு செய்வதற்குத் தேவைப்படும் வளர்ச்சி உறுதி செய்யப்படவேண்டும் என்றார்.
மற்ற பல நாடுகளில் அரசாங்கக் கொள்கைகள் பெரும்பாலானவை நிகழ்காலத்தை ஒட்டியே சுழல்வதாகக் கூறிய திரு முரளி, அதற்கு மாறாக சிங்கப்பூரின் கொள்கைகள் வருங்காலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் இனி முன்னோக்கிச் செல்வது வேறெங்கும் காணத் தேவையின்றி தனக்குள்ளே பதிலைத் தேடும் சிறப்பினைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
“எப்படி பிறருடன் ஈடுபடுகிறோம், எப்படி நம் துடிப்பையும் புத்தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறோம் என்பதற்குள் நம் வருங்கால தீர்வுகள் அடங்கியுள்ளன,” என்றார்.
பல்வேறு நெருக்கடிகளால் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் சிங்கப்பூரர்கள் குறித்து திரு முரளியிடம் கேட்கப்பட்டது. சம்பள வளர்ச்சி, குறைந்த வரி, நல்ல நாணய மதிப்பு ஆகிய சிறப்புகள் மட்டுமின்றி அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு உதவி செய்யும் சமூக அமைப்புகள் சிங்கப்பூரில் இருப்பதைச் சுட்டினார்.
“நமக்கு இருக்கும் ஒரே வளம், மக்கள் வளம். எனவே, நாம் கடினமாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் விவேகத்துடன் உழைக்கவேண்டும். சேவையில் தன்னை மறப்பதே சிறந்த சேவை என்று காந்தியடிகள் சொல்லியிருக்கிறார்,” என்றார் திரு முரளி.
இளம் தலைவர்களை உருவாக்குவது பற்றி மட்டுமின்றி, வழிதவறும் இளையர்களுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் திரு முரளியிடம் கேட்கப்பட்டது. குற்றவியல் வழக்கறிஞராக ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணியாற்றிய திரு முரளி, அத்தகைய இளையர்களின் அனுபவங்களை அறிவதாகச் சுட்டினார். திருந்த நினைக்கும் இளையர்கள் மீண்டும் பழையபடி தீய வழிக்கு ஈர்க்கப்படாமல் இருக்க, சமூக அமைப்புகளும் கைகொடுக்க முடியும் என்றார்.
லிட்டில் இந்தியா பராமரிப்பு
லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியர்களின் வருகையால் ஏற்படும் கூட்ட நெரிசல், கழிவறைகளின் சுத்தமின்மை போன்ற விவகாரங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்குப் பதிலளித்த திரு முரளி, “சரியான கழிவறை வசதிகள் இருப்பது குறித்து அனைத்துத் தரப்பினரும் அக்கறைப்படவேண்டும். இந்தப் பிரச்சினைக்குப் பொறுப்பான முறையில் தீர்வு காணப்படவேண்டும். பிரபல சுற்றுலாத்தலமாக இருக்கும் லிட்டில் இந்தியா, அனைவரும் வந்து காணக்கூடிய இடமாகப் பராமரிக்கப்படவேண்டும்,” என்றார்.
இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று நடைபெற்ற ‘தோசை பிரேக்ஃபாஸ்ட் கிளப்’ நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பங்கேற்றார்.