தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளின் முழுப் பார்வையை வழங்கிய முரசு 360

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளின் முழுப் பார்வையை வழங்கிய முரசு 360

5 mins read
787daf03-4db9-4309-b1d6-2280402138d3
முரசு 360 நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுடன் நிகழ்ச்சியில் பங்களித்த இளையர்கள். (பின்வரிசை இடமிருந்து) விருந்தினர்கள் வடிவழகன், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரஸாக், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், தமிழ் முரசின் ஆசிரியர் த ராஜசேகர். - படம்: பே கார்த்திகேயன்

மொழிக்கு விசித்திரமான குணமுள்ளதாகவும் மொழி வலிமையானதென்றாலும் பயன்படுத்தாமல் விட்டால் மறைந்துவிட வாய்ப்புண்டு என்றும் தெரிவித்துள்ளார் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை.

இன்றைய இளையர்கள், மொழியை நவீன உலகில் புகுத்த புதுப்புது உத்திகளைப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி வாழ்த்திய அவர், அதனை வாழும் மொழியாக வைத்திருக்கத் தொடர்ந்து உழைக்க வேண்டுமென்றும் சொன்னார்.

தமிழ்மொழி விழாவின் முத்தாய்ப்பாக, நடைபெற்ற நிகழ்ச்சிகளின் முழுமையான 360 பாகைக் கோணப் பார்வையை வழங்கியது முரசு 360 விழா.

ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 26) டெசன்சன் ரோட்டில் உள்ள ‘சிவில் சர்விஸ் கிளப்’ அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திரு முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரஸாக், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, எஸ்பிஎச் மீடியா ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

தமிழ்மொழி விழாவின் 20ஆம் ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெற்ற இவ்விழாவில் பேசிய திரு முரளி பிள்ளை, “இருபதாண்டுகளுக்கு முன்பு சிறிதாகத் தொடங்கிய தமிழ்மொழி விழா தற்போது நம் சமூகத்தின் முக்கியத் தூணாக மாறியுள்ளது,” என்றார்.

“இவ்விழா மொழியைப் புழக்கத்திலும் மக்கள் மனத்திலும் தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அது பரிணமித்து, வெறும் நிகழ்ச்சி வரிசை என்பதைத் தாண்டி ஓர் இயக்கமாக உருவெடுத்துள்ளது. மாணவர்கள் தங்கள் குரலைக் கண்டறியவும் அமைப்புகள் நோக்கங்களைக் கண்டறியவும் சமூகம் அதன் ஆன்மாவைக் கண்டறியவும் ஓர் இன்றியமையாத தளமாக விளங்குகிறது,” என்றார் திரு முரளி பிள்ளை.

“இன்னும் 20 ஆண்டுகள் கழித்தும், மொழி குறித்தும், வேர்கள் குறித்தும் நாம் உணரும் அதே பெருமையை அடுத்த தலைமுறையினரும் அடைய வேண்டும்,” என்றார்.

இம்மாதம் முழுவதும் தொடர்ந்து காணப்பட்ட உற்சாகத்தையும் படைப்பாற்றலையும் மொத்தமாகக் கண்முன் நிறுத்திய தமிழ் முரசுக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்தார் அவர்.

தொடர்ந்து, “இக்கட்டில் இணைந்தோர் இலகுவாய்க் கடப்பர் எனும் பழமொழி சொல்வதுபோல நிச்சயமற்ற சூழலில் இன, சமய வேறுபாடின்றி ஒன்றுபடுவதே வலிமை,” என்றும் அவர் சொன்னார்.

தமிழ்மொழி விழாவில் நிகழ்ச்சிகள் படைத்த அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகத் தலைவர்கள், இளையர்கள் எனக் கிட்டத்தட்ட 180 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நேரலை மூலமாகவும் மேலும் பலர் இணைந்தனர்.

“தமிழ்மொழி விழா ஒரு தனி நிகழ்ச்சியல்ல. 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஓர் திருவிழா. அவை அனைத்திலும் பங்கேற்க இயலாதோர்க்கும் பங்கேற்றோர்க்கும் அவை அனைத்தையும் குறித்த முழுப் பார்வையை வழங்கியுள்ளோம்,” என்றார் தமிழ் முரசின் ஆசிரியர் த. ராஜசேகர்.

மேலும், இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் கருப்பொருள் ‘ஈடுபாடு’ என்பதால் 15 இளையர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்ததைச் சுட்டினார்.

இந்நிகழ்ச்சியையும் இளையர்களே வடிவமைத்துப் படைத்ததைச் சுட்டிய அவர், “இளையர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுத்துள்ளோம். இனி அவர்கள் மொழியை இன்னும் சிறப்பான அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வார்கள் என நம்புகிறோம்,” என்றார் அவர்.

“நிகழ்ச்சியின் பெயருக்கேற்றபடி அனைத்து நிகழ்ச்சிகளையும் குறித்த 360 கோணக் கண்ணோட்டத்தைத் தொகுத்து வழங்கியது சிறப்பு. கடந்த ஒரு மாதம் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தமிழ்முரசு அதன் இளமை துள்ளும் செய்தியாளர்களைப் பங்கேற்கச் செய்து, அவர்களின் மூலம் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணச் செய்தனர். இது சிறந்த முயற்சி. அதனை ஒன்றிணைத்துப் படைத்ததும் சிறப்பு,” என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர்கனி.

“இந்நிகழ்ச்சியின் மூலம் இளம் மாணவர்களைப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்துள்ளோம். மாணவர்கள் செய்திகளை வாசிக்கும் பழக்கம் குறைந்துவரும் நிலையில் அவர்களின் மொழிப் பங்கேற்பை அதிகரித்ததுடன், செய்தித்துறையிலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளோம். இது இன்னும் இளையர்கள் பலரை எதிர்காலத்தில் ஈர்க்கும் என நம்புகிறோம்,” என்றார் தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் இர்‌‌‌ஷாத் முஹம்மது.

முரசு 360

தமிழ்மொழி விழா மாதம் முழுவதும் தமிழ் முரசுடன் பயணம் செய்த மாணவச் செய்தியாளர்கள்.
தமிழ்மொழி விழா மாதம் முழுவதும் தமிழ் முரசுடன் பயணம் செய்த மாணவச் செய்தியாளர்கள். - படம்: பே கார்த்திகேயன்

முழுமையாக இளையர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி துள்ளலாகவும் உற்சாகமூட்டும் வகையிலும் அமைந்தது.

செய்தியாளர் வாழ்வில் ஒருநாள் குறித்த காணொளி படைக்கப்பட்டது. தமிழ்மொழி விழாவில் நடைபெற்ற மொத்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு மூன்று காணொளிகளாகத் திரையிடப்பட்டது.

தொடர்ந்து, மேடையில் நேரடியாக, தமிழ்மொழி விழா குறித்த நேர்காணலும் வலையொலியும் படைக்கப்பட்டன. திரு. நசீர்கனி பங்கேற்ற இந்த அங்கங்களை இளம் செய்தியாளர்கள் முன்னெடுத்துச் சென்றனர்.

இம்மாதம் முழுவதும் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் பாடங்களையும் அவர்கள் மேடையில் படைத்தனர். தமிழ்மொழி விழாவில் நிகழ்ச்சிகளைப் படைத்த இளையர்கள் சிலரும் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

புகழ்பெற்ற கலைஞர் வடிவழகனின் வரிகளில் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்பட்ட காணொளியும் திரையிடப்பட்டது.

இளையர் ஈடுபாடு

புகழ்பெற்ற கலைஞர் ச வடிவழகன் குழுவினர் நடத்திய குறுநாடகக் காட்சி.
புகழ்பெற்ற கலைஞர் ச வடிவழகன் குழுவினர் நடத்திய குறுநாடகக் காட்சி. - படம்: பே கார்த்திகேயன்

இவ்வாண்டு’ஈடுபாடு’ எனும் கருப்பொருளையொட்டி 15 இளம் மாணவச் செய்தியாளர்களைச் செய்தித்துறையில் ஈடுபடச் செய்தது தமிழ்முரசு. செய்தி சேகரிப்பு, நேர்காணல் செய்தல், செய்தி எழுதும் முறை, காணொளிப் பதிவு, காணொளித் தொகுப்பு, காணொளி முன்தோன்றிப் பேசுவது என அனைத்தையும் குறித்த பயிலரங்கில் அவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மூத்த செய்தியாளர்களுடன் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளுக்குச் சென்றனர். வழிகாட்டுதல்களுடன் செய்தி எழுதி, அவற்றில் பலவும் தமிழ்முரசு இதழில் வெளியாயின.

“இவ்வாண்டு தமிழ் முரசு 15 மாணவர்களைச் செய்தித் துறையில் ஈடுபடுத்த எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைப் பிரிவுத் தலைவர் அழகிய பாண்டியன்.

இளம் மாணவச் செய்தியாளர்களுக்கு அனுபவம் குறைவாயினும், சிந்தனையில் தெளிவு இருக்கிறது. இளையர்களை ஈடுபடுத்தியதைப் பார்ப்பதில் மனநிறைவு,” என்றார் சிண்டா அமைப்பின் தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன்.

-

“கடந்த ஈராண்டுகளாக முரசு பலப்பல மாற்றங்கள் கண்டுள்ளது. இவ்வாண்டு பல நிகழ்ச்சிகளில் இளம் மாணவர்களைக் காணமுடிந்தது. இது சிறப்பான முன்னெடுப்பு,” என்றார் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால்.

மாணவர்களுடன் எங்கள் செய்தியாளர்கள் நெருக்கமாகச் செயல்பட்டு, அவர்களை வழிநடத்தினர். மூத்த துணையாசிரியர்கள் அவற்றை மெருகேற்ற உதவினர். செய்தி உலகில் நாற்பதாண்டுக்கும் மேலான அனுபவம் எனக்கு உள்ள நிலையில் மாணவர்கள் எழுதுவதைப் பார்ப்பதில் ஆனந்தம். எதிர்காலத்தில் இத்துறையை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வார்கள் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது,” என்றார் தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ. பழனிச்சாமி.

குறிப்புச் சொற்கள்