தேசிய தினப் பேரணி உரை வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) இடம்பெறவுள்ளது.
வெற்றிகரமாக எட்டப்பட்ட குறிக்கோள்கள், காத்திருக்கும் சவால்கள், முக்கியமான கொள்கை முடிவுகள் ஆகியவற்றின் தொகுப்பாக அந்த உரை அமையும்.
பிரதமராகப் பொறுப்பேற்றபின் திரு லாரன்ஸ் வோங் இரண்டாவது முறையாக தேசிய தினப் பேரணி உரையை ஆற்றவுள்ளார். மலாய், மாண்டரின், ஆங்கில மொழிகளில் அது அமைவது வழக்கம்.
முன்னாள் தேசிய அரங்கம், காலாங் அரங்கம், தேசியப் பல்கலைகழகத்தின் கலாசார நடுவம் ஆகியவற்றில் முன்னர் இடம்பெற்ற பேரணி உரை, 2019 முதல் அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
பேரணி உரையின் முக்கியத்துவம்
இனி வரும் ஆண்டுகளில் அரசாங்கம் எதற்கெல்லாம் முக்கியத்துவம் தரவுள்ளது, மக்கள் கலந்துரையாடல் எதைச் சார்ந்து இருக்கும், தொழில்துறைச் செயல்பாடு போன்றவை குறித்த முன்னறிகுறிகளாகத் தேசிய தினப் பேரணி உரை அமையும்.
வீட்டுரிமை, கல்வி, சுகாதாரம், குடும்பங்களுக்கான ஆதரவு போன்றவை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் பேரணி உரையின்போது வெளியாவது வழக்கம்.
கொள்கை முடிவுகளுக்கான காரணங்களை விளக்கவும் தேசிய தினப் பேரணி உரை முற்படுகிறது. அத்துடன், கொள்கைத் திட்டங்கள் சராசரி சிங்கப்பூரர்களிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விளக்க, சிங்கப்பூரர்கள் சிலரைப் பிரதமர் எடுத்துக்காட்டுகளாகச் சுட்டுவது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்களிடையே நம்பிக்கையையும் எதிர்காலம் பற்றிய சிந்தனையையும் வளர்ப்பது இதன் நோக்கமாகும்.
சிங்கப்பூரின் பொருளியல், சமூகச் சூழலை எடைபோட அனைத்துலக கவனிப்பாளர்களும் முதலீட்டாளர்களும் பிரதமரின் பேரணி உரையைக் கவனிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, இனிமேல் என்னென்ன?
நான்கு வார தந்தையர் மகப்பேற்று விடுப்பு, 10 வாரங்களுக்கு அதிகரிக்கப்பட்ட பகிரப்பட்ட மகப்பேற்று விடுப்பு, வேலையற்றோர்க்கான சிங்கப்பூரின் முதல் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவுத் திட்டம், பெற்றோர்க்கு அருகிலேயே பிடிஓ வீடுகளில் வசிக்க ஏதுவாக ஒற்றையர்க்கு முன்னுரிமை என கடந்த ஆண்டு ஏராளமான சமூக ஆதரவுக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.
சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளின்மீது அமெரிக்கா அறிவித்துள்ள இறக்குமதி வரியை அடுத்து, சிங்கப்பூர்த் தொழில்துறைக்கும் ஊழியர்களுக்கும் கூடுதல் ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விநியோகத் தொடர் மாற்றங்களால் தொழில்துறை மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் தொடர்பில் அடுத்துவரும் ஆண்டுகளில் நன்மை பயக்கக்கூடிய கொள்கைகளும் பிரதமரின் உரையில் இடம்பெறக்கூடும்.