அங் மோ கியோவில் 67 வயது பெண்ணைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர், செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 21) சம்பவ இடத்துக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
திருவாட்டி லிம் சுவான் லியான் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 66 வயது இங் சென் ஹேங் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
மாண்ட பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட ஆணுக்கும் ஒருவரையொருவர் தெரியும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும் ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று நம்பப்படுகிறது.
திருவாட்டி லிம்மை 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புளோக் 125 அங் மோ கியோ அவென்யூ 6ல் இங் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டில் திருவாட்டி லிம் சுயநினைவின்றி கிடந்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் பிறகு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 21ஆம் தேதியன்று சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக இங் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் ஐந்து காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.
இங்கை அதிகாரிகள் அக்குடியிருப்புக் கட்டடத்தில் தரைத்தளத்துக்குக் கொண்டு சென்றபோது அவரைப் பார்க்க பொதுமக்கள் திரண்டனர்.
சிவப்பு நிற போலோ டீ-சட்டை அணிந்திருந்த இங்கின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போடப்பட்டிருந்தது. கட்டடத்தில் உள்ள நான்காவது மாடி வீட்டுக்கு இங் கொண்டு செல்லப்பட்டார்.
மின்தூக்கி அருகே காவல்துறையினர் தடுப்பு போட்டதால் செய்தியாளர்களால் அதைக் கடந்து செல்ல முடியவில்லை. வீட்டுக்குள் கொண்டு செல்லப்பட்ட இங், சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.