அடுக்குமாடி வீடுகளின் நடைபாதையில் சிறு பிள்ளைகள் போடும் சத்தம் ஒரு சிறு பிரச்சினை. ஆனால் அதுவே ஒரு பெரும் சோகத்துக்கு இட்டுச் செல்லும் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
ஈசூன் புளோக் ஒன்றில் அண்டைவீட்டாரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஓர் உயிர் பறிபோன சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிங்கப்பூரில் அத்தகைய சம்பவம் நடந்திருப்பது இது முதல்முறை அல்ல.
இவ்வாண்டு ஜூலை மாதம் அதே ஈசூன் வட்டாரத்தின் புளோக் 334Bயில் அண்டைவீட்டார் சர்ச்சையில் ஒருவர் மாண்டார், மற்றவர் காயமடைந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கிங் ஜார்ஜ் அவென்யூவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் அக்கம்பக்கம் வசிக்கும் மூத்தோர் இருவரிடையே மூண்ட சிறு சர்ச்சை மரணத்தில் முடிந்தது. மூத்தோரில் ஒருவர் மற்றவரை இடித்துவிட்டு மன்னிப்புக் கேட்கவில்லை என்பதுதான் சர்ச்சைக்குக் காரணம்.
கடந்த ஆண்டு ஜனவரியில் புக்கிட் பாத்தோக் வீட்டில் அக்கம்பக்கத்தினர் பல ஆண்டுகளாக இரைச்சல் தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். ஒருநாள் ஒருவர், ஒரு மாதைக் கொலை செய்துவிட்டார்.
இத்தகைய சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மன உளைச்சல் என்று குறிப்பிட்டார் மூவாண்டாக மனநல ஆலோசகராகச் சேவையாற்றும் திரு சிவகுமார் பாலகிருஷ்ணன்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தால் நிதிச் சுமை, வேலைப் பளு என பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சிலரின் சகிப்புத்தன்மை வெகுவாகக் குறைவதாக திரு சிவகுமார் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய சூழலில் யார் எப்போது, எப்படி நடந்துகொள்வர் என்று கணிக்க முடியாது. எனவே மனவுளைச்சல் அதிகம் இருக்கும் சமயங்களில் சச்சரவில் ஈடுபடுவதையோ கருத்து வேறுபாடுள்ள அண்டைவீட்டாரிடம் பேசுவதையோ தவிர்ப்பது மிகவும் நல்லது என்றார் அவர்.
அண்டைவீட்டாருக்கு இடையே ஏற்படும் சரச்சையின்போது கொலை செய்தோரில் மூத்தோரும் அடங்குவர்.
மூப்படையும் சிங்கப்பூரில் அத்தகையோர் எதிர்கொள்ளும் சவால்கள் முற்றிலும் மாறுபட்டவை.
தனிமை, விரக்தி, உடல் நோவு என பல காரணங்கள் அவர்களை எளிதில் எரிச்சலடையச் செய்யும் என்றார் திரு சிவகுமார்.
“அடுக்குமாடி வீடுகளில் முன்பு மலர்ந்திருந்த கம்பத்து உணர்வு மீண்டும் துளிர்க்கவேண்டும். இன்றைய சூழலில் அது குறைந்துவிட்டது. குறைந்தபட்சம் ஒரே புளோக்கில் வசிக்கும் மூத்தோரை மின்தூக்கிகளிலோ கீழ்த்தளங்களிலோ பார்க்கும்போது எப்படி இருக்கிறீர்கள்? சாப்பிட்டீர்களா? என்று கேட்கலாம். அது அவர்களை ஆறுதல்படுத்தும்,” என்று தமது அனுபவத்திலிருந்து திரு சிவகுமார் சுட்டினார்.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. அமைதி, பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடித்தால் உயிர்கள் பறிபோவதை நிச்சயம் தடுக்கமுடியும் என்று கூறினர் மனநல வல்லுநர்கள்.
அண்டைவீட்டாரிடையே தொடர்ந்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது? எங்கு, யாரை அணுகுவது? விடைகள் முரசுப் பார்வையில்.