ரமலான் மாதத்தில் நிலவிய அமைதிக்குச் சிங்கப்பூர் முஸ்லிம் சமூகம் நன்றியுடன் உள்ளது: அமைச்சர் ‌‌‌ஃபைஷால்

ரமலான் மாதத்தில் நிலவிய அமைதிக்குச் சிங்கப்பூர் முஸ்லிம் சமூகம் நன்றியுடன் உள்ளது: அமைச்சர் ‌‌‌ஃபைஷால்

2 mins read
2f19808c-3e77-4214-b869-aaed0c9376fc
சுல்தான் பள்ளிவாசலின் காலைத் தொழுகையில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் கலந்துகொண்டார். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 3

சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் சமூகம், ரமலான் நோன்பு மாதத்தில் நிலவிய அமைதிக்கு நன்றியுணர்வுடன் இருப்பதாக, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் சனிக்கிழமை (மார்ச் 21) தெரிவித்தார்.

உள்துறை மூத்த துணை அமைச்சருமான இணைப் பேராசிரியர் ஃபைஷால், நோன்புப் பெருநாள் காலைத் தொழுகைக்குப் பிறகு சுல்தான் பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பேசினார்.

காலைத் தொழுகைக்குப் பிறகு சுல்தான் பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் பேசினார்.
காலைத் தொழுகைக்குப் பிறகு சுல்தான் பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் பேசினார். - படம்: பெரித்தா ஹரியான்

“நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இந்த வேளையில், வெளிநாடுகளில் நிலவும் சூழல் இன்னும் நிச்சயமற்றதாக இருப்பதை மனத்தில் கொள்ளுகிறோம். வீட்டைவிட்டு வெளிநாடுகளில் பெருநாளைக் கொண்டாடுபவர்களையும், கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்வோரையும் நமது சிந்தனையில் கொண்டுள்ளோம்.

“உள்நாட்டில், ரமலான் மாதத்தில் நாம் கற்றுக்கொண்ட நன்றியுணர்வு, கருணை, ஈகை போன்ற நற்பண்புகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம். மற்றவர்களை நினைவில் கொண்டு, அர்த்தமுள்ள வகையில் பெருநாளைக் கொண்டாடுவோம்,” என்று அவர் கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் முஸ்லிம் சமூகத்தினருடன் பேசியுள்ளதாகக் கூறிய அவர், சமூகத்தில் ஆழ்ந்த நன்றியுணர்வு நிலவுவதாக குறிப்பிட்டார்.

சுல்தான் பள்ளிவாசலின் காலைத் தொழுகையில் இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
சுல்தான் பள்ளிவாசலின் காலைத் தொழுகையில் இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் கலந்துகொண்டார். - படம்: பெரித்தா ஹரியான்

“உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் நாம் மன அமைதியுடனும் நிம்மதியுடனும் ரமலான் கடமைகளை நிறைவேற்ற முடிவதுடன், இம்மாதத்தில் நற்செயல்களைச் செய்து பெருநாளைக் கொண்டாட முடிகிறது என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள்.

மேலும், “இதனை அவர்கள் ஆழமாக உணர்கிறார்கள். மேலும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் அதன் பயணத்திற்கும் தங்களின் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற விருப்பமும் அவர்களிடம் உள்ளது,” என்று இணைப் பேராசிரியர் ஃபை‌‌‌ஷால் கூறினார்.

சுல்தான் பள்ளிவாசல் நோன்புப் பெருநாள் காலைத் தொழுகையை முஃப்தி நசிருதீன் முகமது நசீர் வழிநடத்தினார். தொழுகையின் முதல் அமர்வில் கிட்டத்தட்ட 8,000 பேரும், அதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில் மேலும் 6,000 பேரும் கலந்துகொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சுல்தான் பள்ளிவாசல் காலைத் தொழுகையில் பங்கேற்கத் திரண்ட முஸ்லிம் அன்பர்கள்.
சுல்தான் பள்ளிவாசல் காலைத் தொழுகையில் பங்கேற்கத் திரண்ட முஸ்லிம் அன்பர்கள். - படம்: பெரித்தா ஹரியான்

பள்ளிவாசல்களில் திரண்டவர்களைத் தவிர, இந்த ஆண்டு தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடுதல் ‘காரியா’ (qaryah) இடங்களைச் சுட்டிய இணைப் பேராசிரியர் ஃபை‌‌‌ஷால், இந்த ஏற்பாடு அதிகமான மக்கள், குறிப்பாக மூத்தவர்கள், நடமாடச் சிரமப்படுவோர் வசதியாகத் தொழுகை நடத்த உதவியாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.

உலகின் பல பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்கள், நல்லிணக்கம் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன என்று சுல்தான் பள்ளிவாசலின் துணைத் தலைவர் முகமது புஸி முகமது கூறினார். அந்த நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பல்லின ஒத்துழைப்பின் அடையாளமாகத் திகழும், 207 ஆண்டுகள் பழைமையான இந்தப் பள்ளிவாசலின் நீண்ட பாரம்பரியத்தை அவர் நினைவுகூர்ந்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சீரமைப்புத் திட்டங்களையும் அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

2027ஆம் ஆண்டுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த மேம்பாட்டுப் பணிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று அவர் கூறினார்.

சுல்தான் பள்ளிவாசலின் மேம்பாட்டுப் பணிகள் 2027ஆம் ஆண்டுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுல்தான் பள்ளிவாசலின் மேம்பாட்டுப் பணிகள் 2027ஆம் ஆண்டுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: பெரித்தா ஹரியான்

“இந்த முயற்சிகள் நமது சமூகத்தின் எதிர்காலத்திற்காகவும் வருங்காலத் தலைமுறைகளுக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று கூறியதுடன் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் காலத்தில் பொதுமக்கள் பொறுமையுடனும் புரிதலுடனும் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்