தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வாக்குகளை ஈர்க்க இனம், சமயத்தைக் கையிலெடுப்பது அதிகரிக்கலாம் என்கிறார்

அடையாள அரசியலிலிருந்து காக்க வேண்டும்: பிரதமர் லாரன்ஸ் வோங்

3 mins read
54782adf-17c8-4eed-b1a4-44b15abd6dc5
கடந்த பொதுத் தேர்தலின்போது இன, சமய அடிப்படையில் மக்கள் வாக்களித்து, தேர்தல் முடிவு வேறு மாதிரியாக அமைந்திருந்தால் அது சிங்கப்பூர் சமூகத்தில் பெரும்பிளவை ஏற்படுத்தி இருக்கும் என்று பிரதமர் வோங் கூறினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தேர்தல்களில் போட்டி கடுமையாக இருக்கும்போது வாக்காளர்களை ஈர்க்க இனம், சமயத்தைக் கையிலெடுக்கும் போக்கு அதிகரிக்கலாம் என்றும் அதிலிருந்து காக்கும் வழிகளைச் சிங்கப்பூர் கண்டறிய வேண்டும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரர்கள் அனைவர்க்கும் சேவையாற்றும் கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்த வேண்டும் என்றும் தேர்தலின்போது இன, சமயத்தைக் கையிலெடுப்பதில்லை எனச் சூளூரைக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

அதிபர் உரை மீதான விவாதத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை (செப்டம்பர் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டுப் பொதுத் தேர்தலின்போது, “நம்முடைய வேறுபாடுகளைப் பயன்படுத்தி, நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, பலவீனப்படுத்த” வெளியாள்கள் முயன்றதைத் திரு வோங் சுட்டிக்காட்டினார்.

“ஒரு சம்பவத்தில், குறிப்பிட்ட சமயத்தவரின் நலன்களுக்கு ஆதரவாகக் குறிப்பிட்ட சில வேட்பாளர்கள் குரல் கொடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி அவர்கள்மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இன்னொரு சம்பவத்தில், அரசியலையும் சமயத்தையும் வெவ்வேறாகப் பார்க்க வேண்டும் எனும் நிலைப்பாட்டை எதிர்த்த வேட்பாளர் ஒருவர் பாராட்டப்பட்டார்,” என்று பிரதமர் வோங் விவரித்தார்.

சமய அடிப்படையில் வாக்களிக்கும்படி மலேசிய அரசியல்வாதிகள் இருவரும் முன்னர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தால் தடுத்து வைக்கப்பட்ட ஆஸ்திரேலியர் ஒருவரும் வாக்காளர்களை வலியுறுத்தி இருந்தனர். அவர்களின் சமூக ஊடகப் பதிவுகளை நீக்க சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

கடந்த பொதுத் தேர்தல் நேரத்தில் பாட்டாளிக் கட்சியின் மலாய் வேட்பாளர்களைச் சந்தித்ததாகக் கூறிய சிங்கப்பூர் சமய போதகர் நூர் டெரோஸ், அந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆயினும், அரசியல் ஆதரவிற்காக நூருக்கும் வேறு எவருக்கும் எந்த வாக்குறுதி அளிக்கவில்லை என்று பாட்டாளிக் கட்சி தெளிவுபடுத்தியது.

நல்லவேளையாக, சிங்கப்பூரர்கள் அடையாள அரசியலை நிராகரித்து, நாட்டிற்கு நல்லது செய்வர் எனத் தாங்கள் கருதிய வேட்பாளர்களுக்கு ஆதரவளித்தததாகத் திரு வோங் கூறினார்.

இன, சமய அடிப்படையில் மக்கள் வாக்களித்து, தேர்தல் முடிவு வேறு மாதிரியாக அமைந்திருந்தால் அது சிங்கப்பூர் சமூகத்தில் பெரும்பிளவை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக எதிர்காலத் தேர்தல்களின்போது இன, சமயக் குழுக்கள் அணிதிரட்டக்கூடும் என்றார் பிரதமர்.

“அது, 60 ஆண்டுகாலத்தில் நாம் கட்டியெழுப்பிய ஒற்றுமை, பல்லின, பல சமயச் சமூகத்தைப் பாழ்படுத்திவிடும்,” என்றும் அவர் எச்சரித்தார்.

தேசியப் பற்றுறுதியில் இடம்பெற்றுள்ள, “இனம், மொழி, சமய வேறுபாடற்ற ஒரே மக்கள்” எனும் வரியையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூகம் முதிர்ச்சியடைவதாகவும் சிங்கப்பூர் அரசியல் பரிணமித்து வருவதாகவும் குறிப்பிட்ட திரு வோங், “ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய சோதனை. எதையும் நாம் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது,” என்று அறிவுறுத்தினார்.

பாட்டாளிக் கட்சி வெளிப்படையாகக் கூறாவிடினும், அக்கட்சியும் ஒருநாள் ஆட்சியில் அமர விரும்பலாம் என்றார் பிரதமர்.

இருப்பினும், மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி அல்லது எந்த ஒரு கட்சியும் மக்களின் சேவகர்களே என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரர்கள் அறிவார்ந்த வாக்காளர்கள் எனக் கூறிய அவர், தேசிய தினப் பேரணி உரையின்போது தாம் குறிப்பிட்டபடி, அனைவரது நலன்களையும் முன்னிலைப்படுத்தும் ‘நாம் முதல்’ சமூகத்தை உருவாக்க மீண்டும் அறைகூவல் விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்