ஜோகூர் பாருவில் கிளை திறக்க சவால்களோடு போராடும் முஸ்தபா

ஜோகூர் பாருவில் கிளை திறக்க சவால்களோடு போராடும் முஸ்தபா

2 mins read
9af3946b-cee7-4bb5-9bfd-cd1a0c12a532
ஜோகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதியில் முஸ்தபாவின் கிளையைத் திறக்க ஈராண்டுகளுக்குமுன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சில்லறை வர்த்தக நிறுவனமான முஸ்தபா, மலேசியாவில் கிளையைத் திறப்பதில் சவால்களைச் சந்தித்து வருகிறது.

ஜோகூரில் கிளை திறக்க திட்டமிடப்பட்ட போதிலும் அதில் ஈராண்டுகளுக்கு மேல் தாமதம் ஏற்பட்டு வருவதாகத் தகவல் அறிந்தோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினர்.

தனது பேரங்காடிக் கிளைக்கான இடத்திற்கு, ஜோகூர் பாருவில் உள்ள கேப்பிட்டல் சிட்டி கடைத்தொகுதியைத் தேர்ந்து எடுத்த முஸ்தபா நிறுவனம், அதில் ஐந்து மாடிகளில் கடைகளை அமைக்க விரும்பியது.

ஆனால், முஸ்தபா விரும்பிய அந்தக் கடைத்தொகுதியின் சில பகுதிகள் வேறு சிலருக்குச் சொந்தமானவை எனத் தெரிய வந்தது.

அவர்களை நாடிய முஸ்தபா, அந்தப் பகுதிகளை வாங்க அல்லது குத்தகைக்குப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கூறின.

கேப்பிட்டல் சிட்டி கடைத்தொகுதி அமைப்பு சற்று வித்தியாசமானது. 11 மாடிகளைக் கொண்ட அந்தக் கடைத்தொகுதி ‘கேப்பிட்டல் வோர்ல்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமானது.

பல்வேறு முதலாளிகள், முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் அந்தக் கடைத்தொகுதியில் தங்களுக்குத் தேவைப்படும் காலி இடங்களை அந்நிறுவனத்திடமிருந்து வாங்கி அவற்றில் கடை நடத்துகிறார்கள்.

கடைத்தொகுதியில் 591 காலி அறைகளும் இதர சொத்துகளும் விற்பனை ஆகாமல் இருந்தன.

இந்நிலையில், கடந்த 2023 ஜனவரியில் கேப்பிட்டல் வோர்ல்ட் நிறுவனத்திடம் முஸ்தபா 368 மில்லியன் ரிங்கிட் (S$118.9 மில்லியன்) மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அந்தத் தொகையில் கிட்டத்தட்ட 26 விழுக்காடு, அதாவது 96 மில்லியன் ரிங்கிட்டை முன்பணமாக முஸ்தபா வழங்கியது என கேப்பிட்டல் வோர்ல்ட் தெரிவித்துள்ளது.

ஆயினும், அந்த ஒப்பந்தம் இன்றுவரை நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.

கேப்பிட்டல் வோர்ல்ட் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வெளியிட்ட வருமான நிலவர அறிக்கையில், முஸ்தபாவின் ஒப்பந்தம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்