திருவாட்டி ஏடலின் டானும் அவரது குடும்பத்தாரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகலில் அவரது தந்தையின் சாம்பலை அரசாங்கம் நிர்வகிக்கும் மண்டாய் தகனச்சாலையில் பெறவிருந்தனர்.
இருப்பினும், அவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. தந்தையின் சாம்பல் தவறான குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
குழப்பம் நடந்தது குறித்து அதிருப்தி தெரிவித்த குடும்பத்தினர், தங்கள் தந்தையின் சாம்பல் தவறான குடும்பத்திடம் வழங்கப்பட்ட குழப்பத்துக்காக தேசிய சுற்றுப்புற வாரியம் அதிகாரபூர்வமாகக் கேட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை கூறிய வாரியம், இந்த நேரத்தில் அவர்களுக்கு தான் ஆதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டது.
69 வயது திரு டான் ஆகஸ்ட் 4ஆம் தேதி உயிர் இழந்தார்.
தமது தந்தையின் சாம்பல் வேறொருவரிடம் கொடுக்கப்பட்டதாகத் திருவாட்டி டானிடம் ஈமச்சடங்கு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். சாம்பல் பெறும் நிலையத்தில் அவரிடம் இத்தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றார் அவர்.
தகனச்சாலை, சாம்பல் பெறும் நிலையம் இரண்டுமே தேசிய சுற்றுப்புற வாரியத்தால் நிர்வகிக்கப்படுவதால் தங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்றார் திருவாட்டி டான்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், தங்களின் தவற்றை ஒப்புக்கொள்வதாக வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இது கடுமையான குறைபாடு. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி, சாம்பலை வழங்குவதில் முறையான நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பதை நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று விவரித்த வாரியம், தவறிழைத்த அதிகாரிக்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.
சாம்பல் சேகரிப்பு நிலையத்தில் தனது அதிகாரிகள் நிலவரத்தைத் திறம்படக் கையாண்டிருக்க வேண்டும் என்பதையும் வாரியம் ஒப்புக்கொண்டது.

