மியன்மாரில் மீட்புப் பணியில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் படுத்துக் கொண்டே கான்கிரீட் பாளங்களை துளையிட வேண்டியிருந்தது.
இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரை மீட்க அவர்கள் பல மணி நேரம் போராடினர்.
கடந்த மார்ச் 28ஆம் தேதி 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மியன்மாரின் இரண்டாவது ஆகப்பெரிய நகரமான மண்டாலேவைத் தாக்கியது.
தேடி, மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 80 வீரர்கள் அடங்கிய வலுவானக் குழுவை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அனுப்பியது.
1990க்கும் பிறகு இது, லயன்ஹார்ட் படையின் 21வது மீட்பு நடவடிக்கையாகும்.
இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த அக்குழு அரைகுறையாக இடிந்துகிடந்த மூன்று மாடி கட்டடத்திலிருந்து ஒருவரை மீட்பதற்காகப் போராடியதை விவரித்தது.
மார்ச் 30ஆம் தேதி நேப்பிடாவுக்கு வந்த சில மணி நேரத்தில் அந்நகரத்தில் உள்ள சபுதிரி எனும் சிற்றூரில் தேடி மீட்கும் பணியில் குழு இறங்கியது.
இடிபாடுகளில் உயிருடன் சிக்கியவரைக் கண்டுபிடிக்க குறுகலானப் பாதையில் சிரமத்துடன் குழு உள்ளே நுழைய பகீரத முயற்சிகளில் ஈடுபட்டது. நுழைவாயிலிருந்து சுமார் 10 முதல் 15 மீட்டர் தொலைவில் அந்த நபர் சிக்கியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாளங்கள் மேலே விழுந்து விடாமல் இருப்பதற்காக தடுப்புக் கட்டைகள் பயன்படுத்தப்பட்டன. அதிகாரிகள், அந்தப் பாதையில் படுத்துக் கொண்டே கான்கிரீட் பாளங்களை துளையிட்டனர். எட்டு மணி நேரம் நீடித்த மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மாறி மாறி துளையிடும் பணியில் ஈடுபட்டனர்.
வாரண்ட் அதிகாரி முஹமட் அஸ்லான் முகமட், துளையிட்டுக் கொண்டிருந்த அதிகாரியின் பின்னால் நின்று கண்காணித்துக் கொண்டிருந்தார்.
ஒரு வேளை ஏதாவது காங்கீரிட் பாளம் விழுந்தால் அதிகாரியை வெளியே இழுப்பது அவரது பணியாக இருந்தது.
“இடிந்த கட்டடம் சீட்டுக்கட்டு போல இருந்தது. அதன் கட்டமைப்புக்கு அதிர்ச்சி ஏற்படாமல் துளையிட்டோம்,” என்றார் அவர்.
வாரண்ட் அதிகாரி பிரையன் ஆங், “மனதளவிலும் உடலளவிலும் சகிப்புத்தன்மையுடன் ஈடுபட்டோம்,” என்றார்.
“உயிருக்குப் போராடியவருக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்ததால் அவரிடம் கவலைப்படாதீர்கள், நாங்கள் இங்கு இருக்கிறோம்,” என்று கூறிக் கொண்டே முன்னேறினோம். பல மணி நேரம் சிக்கியிருந்த அவரது குரலில் நடுக்கம் இருந்தது. அவருக்குத் தைரியமூட்டினோம்” என்று அதிகாரி அஸ்லான் மேலும் தெரிவித்தார்.
இறுதியாக முப்பது வயதுகளில் இருந்த நபரை வெளியே கொண்டுவந்தபோது அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. அவரது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஏப்ரல் 8ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கு முன்பு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, துளையிடும் சாதனத்தை நட்பின் அடையாளமாக மியன்மார் தீயணைப்புத் துறைக்கு வழங்கியது.
பதினொரு நாள் மீட்புப் பணியில் ஆப்ரேஷன் லயன்ஹார்ட் குழு 26 இடங்களில் தேடி மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஏறக்குறைய 130 உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கு மருத்துவ உதவிகளை அது செய்தது.
முழுநேர தேசிய சேவையாளரான கேப்டன் சர்வநாதன் ராஜ்ராகவன் மருத்துவக் குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களில் ஒருவர்.
“மக்களிடம் இருந்த சமூக உணர்வு, அக்கறை இதற்கு முன் பார்த்தது இல்லை. ஒருவர், பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் அல்லது நண்பராக இல்லாதபோதும் அவர்களை மருத்துவச் சாவடிக்கு தூக்கிச் சென்று பின்னர் அழைத்தும் வந்தார்,” என்று கூறிய அவர், உள்ளூர் மக்களின் மீள்திறன் மனதைத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.

