மியன்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 13 இடங்களில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சீர்குலைந்துள்ள மியன்மாரில் மீட்பு நடவடிக்கைகளில் கைகொடுக்க 80 பேரைக் கொண்ட குழு தேடல், மீட்புப் பணிகளில் உதவ நான்கு மோப்ப நாய்களுடன் மார்ச் 29ஆம் தேதி மியன்மார் சென்றது.
‘கோல்டன் ஹவர்’ என்ற முக்கியக் கட்டமான முதல் 72 மணி நேரத்தில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஓர் உயிரைக் காப்பாற்றியதையடுத்து பிற இடங்களிலிருந்த சடலங்களைச் சேதமின்றி மீட்கும் பணிகளிலும் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மியன்மாரில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அங்குள்ள நிலை குறித்தும் செய்தியாளர்களிடம் காணொளி வழியே பேசிய மீட்புக் குழுவின் தலைவர் கர்னல் டே ஸி வெய், 42 (Tay Zhi Wei), “இந்தப் பதினான்கு நாள்களில் ஏதேனும் உயிரைக் காப்பாற்ற சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் இறுதி நொடிவரை முயன்று பார்ப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.
வெளிநாடுகளில் இப்படிப்பட்ட மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தமக்கு முதன்முறை என்ற கர்னல் டே அனுபவமுள்ள இதர அதிகாரிகள் உதவி வருவதாகச் சொன்னார்.
சிறு துளை வழி சிக்கியிருந்த நபரிடம் தொடர்புகொண்டு சிறுசிறு காயங்களுடன் அவரை மீட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார் திரு. டே. இடிபாடுகளிலிருந்து ஓர் உயிரை மீட்டது இயன்றவரை செயல்பட முனைப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் பகிர்ந்தார்.
குழுவிலிருந்த பாதிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்களாக இருந்தாலும் நோன்புப் பெருநாளன்றும் அயராது பாடுபட்டதைக் கர்னல் டே சுட்டிக்காட்டினார்.
முதலில் சென்று இறங்கியபோது நேப்பிடோ விமான நிலையம் எதிர்பார்த்ததைவிட நல்ல நிலையில் இருந்ததாகவும் உள்ளூர் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் உதவுவதாகவும் தெரிவித்தார் கர்னல் டே.
தொடர்புடைய செய்திகள்
மியன்மாரிலிருந்து சிங்கப்பூரைத் தொடர்புகொள்ள தொலைத்தொடர்பு சமிக்ஞைகள் மிகக் குறைவாக இருப்பதாகச் சொன்ன அவர், அதிகாரிகளுக்கு அந்நாட்டின் வெப்பநிலையும் (41 டிகிரி செல்சியஸ்) சிரமத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
அதனை எதிர்கொள்ள உலகெங்கிலுமிருந்து தொடர்புகொள்ள உதவும் ‘பிராட்பேண்டு குளோபல் ஏரியா நெட்வொர்க்’ எனும் அமைப்பை உபயோகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
“நேப்பிடோவில் தங்கியுள்ள அதிகாரிகள் அருகிலுள்ள விடுதியில் நல்ல நிலையிலுள்ள அறைகளையும், போக்குவரத்துப் பணிகளுக்காக அக்கட்டடத்தின் வாகன நிறுத்தத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது,” என்றார்.
அந்நகரின் விமான நிலையப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளதாகவும் அங்கும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா எனத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார் அவர்.
‘ரெஸ்கியூ எஞ்சினீர்ஸ்’ எனப்படும் மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள், கட்டடத்தின் எந்தப் பகுதியை இடித்து, எந்தப் பகுதியை இடிக்காமல் இருந்தால் மென்மேலும் சேதமின்றி மீட்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
“கடும் சிரமங்களுக்கிடையிலும் தொடர்ந்து பணியாற்றுகின்றோம். ஆனால் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை. இயன்றவரை மக்களைக் காப்பாற்றுவதே நோக்கம்,” என்று குறிப்பிட்டார் டே.
இன்னும் சில இடிபாடுகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் சொன்னார் டே.