பணியிடைக்காலத்தில் திறன்களை மேம்படுத்தவும் புதிய திறன்களைக் கற்க ஆலோசனைகள் பெறவும் கிட்டத்தட்ட 300 பேர் ஞாயிற்றுக்கிழமை (மே 17) ஒன்றிணைந்தனர்.
‘மீடியாகார்ப்’ தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு, மூன்றாம் முறையாக ஏற்பாடு செய்த ‘நாளை நமதே’ என்ற நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர். ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எஸ்ஜி’ அமைப்பும் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகமும் (e2i) அதனை இணைந்து நடத்தின.
ஜாலான் புசார் சமூக மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எஸ்ஜி’ இணையத்தளத்தைப் பயன்படுத்திப் புதிய பயிற்சித் திட்டங்களைக் கண்டறிதல், விண்ணப்பித்தல், வேலை தேடும் ஆவணங்களைப் பற்றிப் புரிந்துகொண்டு அவற்றை உருவாக்குதல் போன்ற நுணுக்கங்களைப் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர்.
மேலும், வெவ்வேறு வேலைகளில் திறன்களை மேம்படுத்திக்கொண்ட ஊழியர்கள் மூவருடன் சிறப்பு உரையாடல் அங்கமும் இடம்பெற்றது.
“கற்றலுக்கு முடிவே இல்லை. அது வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியது என்பதை ஊக்குவிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும்,” என்று கூறினார் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சுதேஷினி தனராஜ்.
40 வயதை எட்டிய சிங்கப்பூர்க் குடிமக்களுக்குப் பணியிடைக்காலத் தொகையாக $4,000 வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள விரும்பும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு 50 விழுக்காடுவரை மானியங்கள் வழங்கப்படக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
வேகமாக மாறிவரும் உலகில் செயற்கை நுண்ணறிவு அதிக முக்கியத்துவம் பெற்றுவருவதால் அதற்கேற்பப் புதுப்பித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு ரகு உத்தமன், 52.
பணியிடத்தில் தாம் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும் தமது மனைவி ‘சாட்ஜிபிடி’ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
“அதனால் இந்தக் கருவிகளை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது நல்லது,” என்றார் திரு ரகு.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ மூலம் ஏற்கனவே பல பயிற்சித் திட்டங்களை நிறைவு செய்துள்ள பாதுகாப்பு மேலாளர் ஜெய்சங்கர், 58, அந்தத் திட்டங்களில் மேலும் பலர் சேரத் தொடர்ந்து முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“இந்தப் பயிற்சி திட்டங்களில் சேர விரும்பும் ஊழியர்களுக்குப் பணியிடங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற சலுகைகளை வழங்கினால் நன்றாக இருக்கும். இது பலருக்கும் உந்துதலாக அமையும்,” என்ற தமது விருப்பத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
காலை 9 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற நிகழ்ச்சியில் கேளிக்கை, விளையாட்டு, பரிசுகள், அதிர்ஷ்டக் குலுக்கல் முதலிய அம்சங்களும் இடம்பெற்றன.

