பன்முக உணர்வு, உளவியல் செயல்பாடுகள் மூலம் மறதிநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய ‘நமஸ்தே கேர்’ திட்டம் தற்போது அனைத்து நோயாளிகளுக்கும் விரிவடையவுள்ளது.
டான் டோக் செங் மருத்துவமனையில் மறதிநோயாளிகளின் அறிவுசார், உடல்சார் திறன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட உடற்பிடிப்பு, அன்பான தொடுதல், அமைதியான சூழல், நறுமணம், இசை ஆகியவற்றை உள்ளடக்கிய ‘நமஸ்தே கேர்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அமெரிக்கப் பயணத்தின்போது அங்கு நடைமுறையில் இருந்த இந்தத் திட்டத்தை, ஆசியக் கலாசாரத்துக்கு ஏற்ப, சற்றே மாற்றி சிங்கப்பூரில் அறிமுகம் செய்தார் முதியோர்நல மருத்துவத் துறைத் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் நூர்ஹஸ்லினா அலி.
“2023ஆம் ஆண்டு, முன்னோடித் திட்டமாக 32 படுக்கைகளுக்கு அறிமுகம் செய்தோம். அது தந்த பலன் காரணமாக, தற்போது மருத்துவமனையில் உள்ள 600க்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
கடந்த பத்தாண்டுகளாகத் தாமே தாதியர்க்குப் பயிற்சியளித்ததாக அவர் சொன்னார். தற்போது அவர்களும் அத்தகைய சேவைகளை வழங்கத் தொடங்கியதாகவும் டாக்டர் நூர்ஹஸ்லினா விளக்கினார்.
தற்போது மையத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட தாதியர் பயிற்சிகளில் தேர்ந்துள்ளதை அவர் சுட்டினார்.
“இது ஒரு தனித்துவமான செயல்பாடு என்பதைத் தாண்டி, அன்றாடப் பராமரிப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதைப் புரியவைப்பது பெரிய சவாலாக இருந்தது,” என்றார் டாக்டர் நூர்ஹஸ்லினா.
“முதலில் இதைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தபோது, இது ஒரு கூடுதல் வேலை என்று தாதியரும் மருத்துவமனைப் பணியாளர்களும் நினைத்தனர். வழக்கமான பணிகளுடன் சேரும் ஒரு கூடுதல் சுமை என்று அவர்கள் கருதினர். இதற்குக் கூடுதல் நேரமானதால் அவர்களுக்கு முதலில் கடினமாகத் தெரிந்தது,” என்று அவர் சொன்னார்.
“காலப்போக்கில் அத்தகைய செயல்பாடுகள், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது. அத்துடன் அவர்களின் ஒத்துழைப்பும் கூடியதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இது தாதியரின் பணியையும் எளிமைப்படுத்தியதைக் கண்டபோது இதற்காக நேரம் ஒதுக்கத் தொடங்கினர்,” என்றும் டாக்டர் நூர்ஹஸ்லினா விளக்கினார்.
தாதியருடன் ஒத்துழைக்காத சிலரிடமும் இது மாற்றம் ஏற்படுத்தியதை அவர் சுட்டினார்.
மேற்கத்திய நாகரிகத்தில் தொடுதல் இயல்பாக இருந்தாலும் ஆசிய நாகரிகத்தில் அது பரவலாக இல்லை என்றும் முதலில் விரல்களில் தொடங்கி, பின்னர் கைகள், தோள்பட்டைப் பிடிப்புகளுக்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது என்றும் டாக்டர் நூர்ஹஸ்லினா கூறினார்.
இது அவர்களுக்கு ஆறுதல் அளித்து, மனத்தை இதமாக்குவதாகவும் சொன்னார் நூர்ஹஸ்லினா.
“நான் 2023 ஆம் ஆண்டிலிருந்து இங்குள்ள மறதிநோயாளிகளுக்கு ‘நமஸ்தே கேர்’ செயல்பாடுகளைச் செய்கிறேன். இதற்கான பயிற்சியில் பங்கேற்று, அவர்களுக்கு இதனைச் செய்கிறேன்,” என்றார் தொண்டூழியரான கேத்தரின் விஜி, 40.
வாரம் ஒருமுறை வந்து நோயாளிகளுடன் உரையாடுவது பிணைப்பை ஏற்படுத்துவதுடன் ஆறுதல் அளிப்பது மனநிறைவைத் தருவதாகவும் அவர் சொன்னார்.
டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருவாட்டி ஷீலா கேசல், 88, அவ்வப்போது தொண்டூழியர்கள் தங்களை அறையிலிருந்து வெளியே அழைத்துவந்து இசை கேட்க வைப்பது, நகப்பூச்சு செய்வது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார். தமக்கு துள்ளலான, துடிப்பான இளையர்களுடன் கலந்துரையாடப் பிடிக்கும் என்றும் அதற்கும் இது வாய்ப்பளிக்கிறது என்றும் சொன்னார் திருவாட்டி ஷீலா.

