தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மார்ச் 28 முதல் வாக்காளர் பதிவேட்டில் பெயர்களைச் சரிபார்க்கலாம்

3 mins read
e4ba9868-7797-4524-8da9-a03bee5db6ad
இணையம் வாயிலாகவோ சமூக நிலையங்கள், மன்றங்கள் அல்லது ‘சர்வீஸ்எஸ்ஜி’ நிலையங்களுக்கு நேரடியாகச் சென்றோ வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற சிங்கப்பூரர்கள், வெள்ளிக்கிழமை (மார்ச் 28) முதல், புதிய தேர்தல் தொகுதி எல்லைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களில் (Voter rolls) தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்கலாம்.

வாக்காளர் பதிவேட்டை, தேர்தல் துறையின் இணையத்தளம் வாயிலாக, ‘சிங்பாஸ்’ கணக்கைப் பயன்படுத்திப் பார்வையிடலாம். அல்லது ஏதாவது ஒரு சமூக நிலையம், சமூக மன்றம் அல்லது ‘சர்வீஸ்எஸ்ஜி’ நிலையத்துக்கு நேரில் சென்று சரிபார்க்கலாம் என்று தேர்தல் துறை மார்ச் 27ஆம் தேதி தெரிவித்தது.

சிங்கப்பூரர்கள், தேர்தல் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்றும் தங்கள் விவரங்களைப் பட்டியலில் சரிபார்க்கலாம். அதற்கு, இணையம் வழியாகவோ 1800-225-5353 என்ற தொலைபேசி எண்ணை அழைத்தோ முன்பதிவு செய்திருப்பது அவசியம்.

தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப வாக்களிப்பு வட்டாரங்கள் புதிய தேர்தல் தொகுதி எல்லைக்கு மாற்றப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல்களில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்களில் இதுவும் அடங்கும்.

குழு அதன் அறிக்கையை மார்ச் 11ஆம் தேதி வெளியிட்டது. அடுத்த பொதுத் தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறியாக அது கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள், இணையம் வழியாகத் தங்கள் விவரங்களைச் சரிபார்க்க இயலாவிட்டால் வெளிநாட்டில் பதிவு நிலையமாகச் செயல்படும் சிங்கப்பூர் தூதரகங்களுக்கு நேரில் செல்லலாம் என்று தேர்தல் துறை கூறியது.

பெய்ஜிங், கேன்பரா, துபாய், ஹாங்காங், லண்டன், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, ஷாங்காய், தோக்கியோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் அத்தகைய தூதரகங்கள் அமைந்துள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தவறியதால் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்ட சிங்கப்பூரர்கள், தங்கள் பெயரை மீண்டும் இணைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் துறை குறிப்பிட்டது.

இருப்பினும், சிங்கப்பூர்ச் சட்டத்தின்கீழ், ஒரு தொகுதியில் போட்டி இல்லாவிட்டால், தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் வேட்பு மனுத் தாக்கல் நாள் வரையிலும், வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்களிப்பு நாள் வரையிலும் இத்தகைய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவேட்டில் இணைக்க இயலாது.

எனவே, பொதுத் தேர்தல் 2025ல் அவர்கள் வாக்களிக்க முடியாது என்பதைத் தேர்தல் துறை நினைவுபடுத்தியது.

வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெற்றுள்ள வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள், அஞ்சல் வழியாகவோ வெளிநாடுகளில் செயல்படும் 10 வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்றோ வாக்களிக்கலாம்.

இதற்கு தேர்தல் துறை இணையத்தளத்திலோ அந்தப் பத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்றோ பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வாக்களிக்கத் தகுதிபெற, பதிவு செய்யும் நாளுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் 30 நாள்களாவது அவர்கள் சிங்கப்பூரில் வசித்திருக்க வேண்டும்.

ஒரு தொகுதியில் போட்டி இல்லாவிட்டால் தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட மூன்றாம் நாள் முதல் வேட்பு மனுத் தாக்கல் நாள் வரையிலும், வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்களிப்பு நாள் வரையிலும் இத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டா.

எனவே பொதுத் தேர்தல் 2025ல் வாக்களிக்க விரும்பும் வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் முன்கூட்டியே அதற்கு விண்ணப்பிக்கும்படி ஊக்குவிப்பதாகத் தேர்தல் துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்