நான்னிங்: சீனாவின் மேற்கு வட்டாரத்தை ஆசியானுடன் இணைக்கும் புதிய அனைத்துலக நில-கடல் வர்த்தக வழித்தடம் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் போட்டித்தன்மை மிகந்த செலவுகளையும் காலத்திறனையும் ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு சீனாவின் குவாங்ஸி தன்னாட்சி வட்டாரத்தின் தலைநகரமான நான்னிங் நகரம் ஆசியானுடனான உறவுகளுக்கு முக்கிய நுழைவாயிலாகத் திகழ்கிறது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கான தமது ஐந்து நாள் பயணத்தின் தொடக்கமாக, திங்கட்கிழமை (மே 18) பெய்பு வளைகுடா அனைத்துலகத் துறைமுகக் குழுமத்தின் தலைமையகத்தை அவர் சுற்றிப் பார்த்தார்.
புதிய அனைத்துலக நில-கடல் வர்த்தக வழித்தடத்தின் வெற்றியை அங்கு கண்டதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று திரு லீ கூறினார்.
சரக்குக் கப்பல்கள் தென்மேற்கு சீனாவிலிருந்து கடலைச் சென்றடைவதற்கான நேரடிப் பாதையை உருவாக்க, 70 பில்லியன் யுவானுக்கும் (S$13.1 பில்லியன்) அதிகமான மதிப்பிலான ‘பிங்லு கால்வாய்’ திறக்கப்பட உள்ளது.
அதன் மூலம், சீனாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் மேலும் ஊக்கம் பெறும்.
“சீனாவின் மேற்கு மாநிலங்களில் அதிக வளர்ச்சிக்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளன. யாங்சே நதி தொடங்கி ஷாங்காய் வரையிலான வெளி உலகத்துடனான இணைப்புப் பயணம் மிகவும் நீண்ட ஒன்றாக இருந்தது.
“குவாங்ஸி வழியாகவும் பெய்பு வளைகுடா வழியாகவும் பயணம் செய்து, அங்கிருந்து தென்கிழக்கு ஆசியா, வடகிழக்கு ஆசியா அல்லது உலகின் பிற பகுதிகளுக்குச் செல்லும் பாதையே மிக விரைவான வழித்தடமாக அமையும்,” என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மூத்த அமைச்சர் லீ, ஐந்து நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இவ்வாரத்தின் பிற்பகுதியில் ஷாங்காய் நகர் செல்லும் அவர், ஷாங்காய் நகரமன்ற மக்கள் அரசாங்கத்தின் மேயரைச் சந்தித்து அவர் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்பார்.
அத்துடன், சீனாவில் பரந்து விரிந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டறிய அது தொடர்பான நிறுவனங்களுக்கு திரு லீ சென்று பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

