சிங்கப்பூரின் நன்யாங் தொடக்கக் கல்லூரியில் மாணவிகள் கழிப்பறையில் ரகசியமாகப் படம்பிடிக்க முயன்றதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அது தொடர்பாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கழிப்பறையில் படம் எடுக்க முயன்ற அந்த மாணவரை மற்ற இரு மாணவர்கள் கையும்களவுமாகப் பிடித்து விசாரிக்கும் காணொளி தனக்குக் கிடைத்ததாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) ‘மதர்ஷிப்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவத்தை உறுதிப்படுத்திய கல்லூரியின் தலைமையாசிரியர் பாங் சூன் ஹவ், பாலியல் முறைகேடுகளைப் பள்ளி நிர்வாகம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது நன்னடத்தைப் புள்ளி விவரங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தலைமையாசிரியர் கூறினார்.
தற்போது அந்த மாணவருக்குப் பள்ளி ஆலோசகர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது பெற்றோருடனும் பள்ளி நிர்வாகம் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் நலனை உறுதி செய்யத் தேவையான ஆதரவு வழங்கப்படுவதாகவும் பாதுகாப்பான கற்றல் சூழலைப் பேணுவதே பள்ளியின் முக்கிய நோக்கம் என்றும் தலைமையாசிரியர் கூறினார்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


