நிர்வாணமாக நடந்துசென்ற என்டியு மாணவர் கைது

1 mins read
6e9bb417-4df2-46a7-b1ce-7ecb320e46c8
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் மாணவர் நிர்வாணமாக சாலை ஓரத்தில் நடந்துசெல்வது தெரிகிறது - படம்: KATONGNUGGETS/REDDIT

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தில் நிர்வாணமாக நடந்துசென்றது காணொளியில் பதிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) அவர் கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், அவர் சாலை ஓரத்தில் நிர்வாணமாக நடந்துசென்றது தெரிகிறது. பதிவின் தலைப்பு, காணொளி நன்யாங் தொழில்நுட்பக் கழகத்தில் பதிவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டிருந்த கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை, எண் 110 நன்யாங் கிரசென்ட் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையத்திலிருந்து உதவிக்கான தொலைபேசி அழைப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணிக்குக் கிடைத்ததாகத் தெரிவித்தது.

“22 வயது ஆடவர் ஒருவர் பொது இடத்தில் நிர்வாணமாக இருந்த குற்றத்துக்குக் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வித காயமும் ஏற்பட்டத் தகவல் இல்லை. விசாரணை தொடர்கிறது,” என்று காவல்துறை கூறியுள்ளது.

“ஒருவர் பொது இடத்தில் நிர்வாணமாக இருந்ததாக சம்பவம் நிகழ்ந்த காலையில் தகவல் பெறப்பட்டு, சிறிது நேரத்தில் பள்ளியின் பாதுகாவலர்கள் அவரை அடையாளம் கண்டனர். அதன்பிறகு காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்,” என்று என்டியு நிர்வாகத்தின் பேச்சாளர் கூறினார்.

சம்பந்தப்பட்ட மாணவருக்கும் இதனால் பாதிப்படைந்த சக மாணவர்களுக்கும் ஆதரவு வழங்க அவர்களை என்டியு தொடர்புகொண்டுள்ளது.

கல்வி வளாகத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பும் மரியாதையும் நிலைநாட்டப்படுவதற்கு பள்ளி கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அதன் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்