கட்சி நிலைப்பாடுகளைப் பொறுத்தவரை பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கின் நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக அந்தக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் யுதிஷ்டிரா நாதன் தெரிவித்திருக்கிறார்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தொடர்பான வழக்கின் ஆறாவது நாளான திங்கட்கிழமை (அக்டோபர் 21) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு நாதன் அவ்வாறு பதில் அளித்தார்.
பொய்யைத் தன்னுடன் கல்லறைக்குக் கொண்டுசெல்லும்படி திரு பிரித்தம் சிங் கூறினார் என்றால் அதனை ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று திரு நாதனை விசாரித்த தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோய் கேள்வி எழுப்பினார்.
கட்சியின் நிலைப்பாட்டுடன் உடன்படவில்லை என்றால் அது குறித்து தம்மால் குரல் கொடுக்க முடியும் என்றாலும் எப்போதும் அதனைச் செய்வதில்லை எனத் திரு நாதன் பதிலளித்தார்.
2021 ஆகஸ்ட் 7ஆம் தேதி திருவாட்டி கானுடனும் திருவாட்டி லோவுடனும் இணைந்திருந்த ஸூம் அழைப்பில் திரு நாதன், ஏதேனும் அறிவுரை கூறினாரா என அவரிடம் வழக்கறிஞர் ஜுமபோய் கேட்டார்.
அந்த அழைப்பின்போது தாம் கூறிய அறிவுரையைச் சரியாக நினைவுபடுத்த இயலவில்லை என்றாலும் பாட்டாளிக் கட்சித் தலைவர்களின் சொற்படி நடக்க அறிவுறுத்தி இருக்கலாம் என்று திரு நாதன் பதில் கூறினார்.
“இருந்தபோதும் நானும் திருவாட்டி லோவும் அவ்வளவு அறிவுரை கொடுத்ததாக நினைவில் இல்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதற்காக நாங்கள் அழைப்பில் இணைந்தோம். அழைப்பின்போது திருவாட்டி கான் அழுதுகொண்டிருந்தார்,” என்று திரு நாதன் சொன்னார்.
பொய் சொன்னதற்காக திருவாட்டி கானைத் தாம் கண்டித்தாரா என்று தற்காப்பு வழக்கறிஞர் கேட்டதற்கு, திரு நாதன் “இல்லை,” எனப் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி கான் உண்மையைச் சொல்லி ஆகவேண்டும் என அவரிடம் சொன்னாரா என்று திரு ஜுமபோய் திரு நாதனிடம் கேட்டார்.
அதற்கு இல்லை எனப் பதிலளித்த திரு நாதன், காத்திருந்து கட்சித் தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பார்ப்பது தங்கள் அணுகுமுறையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
ஸூம் அழைப்பின்போது திருவாட்டி கான் இருந்த மனநிலையில் பொய்யை ஒப்புக்கொள்ளும்படி அவரிடம் கூறவில்லையா என்று திரு ஜுமபோய் திரு நாதனிடம் கேட்டார்.
அந்த நேரத்தில், “இந்தச் சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை முடிவெடுப்பது தங்களது பொறுப்பல்ல,” என்று திரு நாதன் கூறினார்.
“ஆனால் நண்பர்கள் என்ற முறையில் இதை நீங்கள் செய்ய முன்வரவில்லையா,” என்றார் திரு ஜுமபோய்.
இதற்குத் திரு நாதன், “ திருவாட்டி கான் எனது நாடாளுமன்ற உறுப்பினர். என் நண்பராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் அரசியல் பதவியிலுள்ள மூத்த சக கட்சிப் பணியாளர்,” என்றார்.
இரண்டாவது நாளாக திரு நாதன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.