தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாதன்: பொய்யை ரயீசா தொடர வேண்டும் என்று விரும்பினேன்

3 mins read
f1bac9a9-ce60-46f7-80cf-549999a333b8
திரு பிரித்தம் சிங் தொடர்பான வழக்கில் மூன்றாம் சாட்சியாக திங்கட்கிழமை (அக்டோபர் 21) முன்னிலையான திரு யுதிஷ்த்ரா நாதன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உண்மையை ஒப்புக்கொள்வதற்கான முறையான திட்டம் ஏதும் இல்லாததால் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் அவரது பொய்யைத் தொடரவேண்டும் என்று தாம் விரும்பியதை கட்சியில் அவருடன் இணைந்து செயலாற்றிய திரு யுதிஷ்த்ரா நாதன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தொடர்பில் நடைபெறும் நீதிமன்ற விசாரணையின் ஆறாம் நாளன்று (அக்டோபர் 21) திரு நாதன், தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோயால் விசாரிக்கப்பட்டபோது அவ்வாறு கூறினார்.

இதனைத் தொடர்ந்து, திரு நாதன் நீக்கிய குறுஞ்செய்திகளின் பிரதியைக் கோரி தற்காப்புத் தரப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானிடம் பொய்யுரைகள் பற்றி என்ன செய்யச் சொன்னார் என்பதன் தொடர்பில் திரு சிங் இரண்டு முறை நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய் சொன்னதாக அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறிப்பிடுகின்றன.

வழக்கின் மூன்றாவது சாட்சியாக முன்னிலையான திரு நாதன், 2021 அக்டோபர் 12ஆம் தேதியன்று திருவாட்டி கானைச் சந்தித்த பிறகு, அவர் உண்மையை ஒப்புக்கொள்வதற்கு வகை செய்யும் தகுந்த திட்டத்தை பாட்டாளிக் கட்சி உருவாக்கவில்லை என்று கவலைப்பட்டதை திரு நாதன் ஒப்புக்கொண்டார்.

“தகுந்த திட்டம் இல்லாத நிலையில் திருவாட்டி கான் தொடர்ந்து பொய்யுரைக்க வேண்டும் என்பது உங்கள் நிலைப்பாடாக இருந்ததா?,” என்று திரு ஜுமபோய் கேட்டார்.

அந்த நேரத்தில் தமது நிலைப்பாடு அவ்வாறாக இருந்ததை திரு நாதன் அவரிடம் ஒப்புக்கொண்டார்.

சூழ்நிலை, மாதக் கணக்காக கட்சித் தலைவர்கள் கொடுத்த உத்தரவுகள், தகுந்த திட்டம் இல்லாதது ஆகியவையே இதற்குக் காரணம் என்றார் திரு நாதன்.

“எனவே, ஆம், அந்த நேரத்தில் நான் குழம்பித் தடுமாறினேன்,” என்று அவர் கூறினார்.

இருந்தபோதும், பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முன்னிலையில் திருவாட்டி கான் உண்மையை ஒப்புக்கொள்ளும்படி அவரின் முன்னாள் உதவியாளர் திருவாட்டி லோ பெய் யிங் யோசனை தெரிவித்ததை திரு நாதன் அப்போது நிராகரித்ததாகத் தற்காப்புத் தரப்பு குறிப்பிட்டது.

அக்டோபர் 12ஆம் தேதி சந்திப்பின்போது, திருவாட்டி கான் தொடர்ந்து பொய்யுரைக்க வேண்டும் எனத் தாம் திரு பிரித்தம் சிங்கிடம் கூறியிருந்தாரா என்பது குறித்து நினைவு இல்லை என்று அவர் சொன்னார்.

முன்னதாக, தாம் உறுதியாக அவ்வாறு சொல்லவில்லை என்று திரு நாதன் கூறியதைக் குறிப்பிட்ட திரு ஜுமபோய், அந்தச் சந்திப்பின்போது திரு நாதன் அவ்வாறு சொன்னதாக திருவாட்டி லோ கூறியதைச் சுட்டினார்.

இதற்குப் பதிலளித்த திரு நாதன், நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகச் சொல்லி, மீண்டும் இது பற்றி நினைத்துப் பார்க்கையில் பொய்யுரைப்புப் பற்றிய யோசனைையை முன்வைத்தது நினைவில்லை எனக் கூறினார்.

விசாரணையின் பிற்பகுதியில், திரு நாதன் நீக்கிய குறுஞ்செய்திகளின் பிரதிகளைப் பெற வழக்கறிஞர் ஜுமபோய் விண்ணப்பித்தார்.

நீக்கப்பட்ட குறுஞ்செய்திகள் திருவாட்டி கான் இரண்டு முறை பொய்யுரைத்ததற்குப் பிறகு அனுப்பப்பட்டதால் அவை நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் விசாரணைக்கு முக்கியம் இல்லை என்பது தமது கருத்தாக உள்ளது என திரு நாதன் கூறினார்.

திரு நாதனும் திருவாட்டி லோவும், கட்சித் தலைவர்களின் சொற்படி நடப்பதாகக் கூறி வந்தாலும் உண்மையில் நண்பர்கள் என்ற முறையில் திருவாட்டி கானைப் பொய் சொல்லச் சொன்னது அவர்கள்தான் என திரு ஜுமபோய் வாதிட்டார்.

இதனை எதிர்த்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆங் செங் ஹோக் முன்வைத்த வாதங்களைக் கேட்ட நீதிபதி லியூக் டான், இது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்னர் திரு நாதனின் ஆதாரங்களையும் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் கொடுக்கப்பட்ட பத்திரங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இதற்கிடையே, விசாரணைக்கு முன்னிலையாக பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைவர் லாே தியா கியாங் நீதிமன்றத்திற்கு வந்தபோதும் திரு நாதன் மீதான குறுக்கு விசாரணை முற்றுப்பெறாததால் அவரிடம் நீதிமன்றத்தில் எதுவும் கேட்கப்படவில்லை.

இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) காலை 11 மணிக்குத் தொடரும்.

குறிப்புச் சொற்கள்