தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு இலக்குகள்

நான்கு துறைகளில் கவனம் செலுத்தும்

தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு இலக்குகள்

படம்: பிக்சாபே

12 Feb 2026 - 3:57 pm

2 mins read

மாறிவரும் உலகில் போட்டித்தன்மையுடன் விளங்க நான்கு துறைகள் புதிய ‘ஏஐ’ இலக்குகளுடன் மேம்பாடு காணவுள்ளன.

சரியாகப் பயன்படுத்தப்பட்டால் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிங்கப்பூருக்கு உத்திபூர்வ நன்மையாக அமையும் என்று தமது வரவு செலவுத் திட்ட உரையில் கூறிய பிரதமர் லாரன்ஸ் வோங், அதற்காகப் புதிய ‘தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு இலக்குகளை’ (AI Missions) அறிவித்தார்.

இந்த இலக்குகள், மேம்பட்ட உற்பத்தி, இணைப்புகள் (Connectivity), நிதி, சுகாதாரப் பராமரிப்பு ஆகிய நான்கு துறைகளில் ‘ஏஐ’ உதவியுடன் மேம்பாட்டை முன்னெடுக்கும்.

மேம்பட்ட உற்பத்தித் துறையின் புதிய ‘ஏஐ’ இலக்குகள் குறித்து வர்த்தக, தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அறிவிக்கப்படும்.

உற்பத்தியில் புத்தாக்கம், இணைப்பு ஆகியவற்றுடன் சிங்கப்பூரின் விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றின் இயக்கங்களைத் தானியக்கமயமாக்குவதன் மூலம் அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் இடத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில் இந்த இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசாங்கம் ஒவ்வொரு துறையுடனும் அணுக்கமாகச் செயல்பட்டு, அதில் உள்ள சிக்கல்களைக் கண்டறியும்.

இவை வெறும் கனவுகள் அல்ல என்ற திரு வோங், ஒவ்வோர் இலக்கும், தெளிவான நோக்கத்தையும் உறுதியான விளைவுகளையும் கொண்டிருக்கும் என்று உறுதியளித்தார்.

‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, அதனையடுத்து வேலையிழப்பு,பயன்பாட்டு நெறிமுறைகள் ஆகியவை குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு ‘பயம்’ சிங்கப்பூரின் பதிலாக இருக்கக்கூடாது. நிச்சயமற்ற தன்மைகள் நம்மை முடக்கிவிட்டால், வேகமாக நகரும் உலகில் நாம் பின்தங்கி விடுவோம்,” என்றார் பிரதமர்.

இதனைத் தெளிவுடன் அணுகவேண்டியதன் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டிய அவர் நாடு, மக்கள் நலன் ஆகியவற்றுக்கேற்ப அது அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவௌபடுத்துவோமென்றும், அதனைப் பொறுப்புடன் பயன்படுத்த விதிகள் வகுக்கப்படும் என்றும் கூறினார். அதன் பலன்கள் சமூகத்தில் அனைவருக்கும் சென்றுசேர வழிவகுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

‘ஏஐ’ தொழில்நுட்பம் தாமே ஓர் கட்டமைப்பை உருவாக்கி, நிரலாக்கம் செய்யுமளவு வளார்ந்துள்ளது. அதனை உற்பத்தித் திறன் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள் எனப் பலவற்றில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன,” என்றார்.

மேலும், “மிகப்பெரிய முன்னோடி மாதிரிகளை உருவாக்குவதைவிட, செயற்கை நுண்ணறிவைத் திறம்பட, பொறுப்புடன், விரைந்து பயன்படுத்துவதே சிங்கப்பூருக்குச் சாதகமானது,” என்று வோங் கூறினார்.

கூகல், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ‘ஏஐ’ மையங்கள் நிறுவப்படதன் மூலம் தற்கான அடித்தளம் அமைத்துள்ளதாகவும் சொன்னார். இவை, சிங்கப்பூரர்களுக்குப் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதையும் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்நிதிவரவுசெலவுத் திட்டம்