ஆசியாவின் முதலாவது உன்னத சிகிச்சைக் கலை நிலையமாக தேசிய கலைக்கூடம்

2 mins read
ef70f291-7862-4bcd-b760-96e87ee5ad5c
சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில், அதிகப் பதற்றத்துடன் உள்ள பார்வையாளர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘அமைதி அறை’. - படம்: சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம்

ஆசியாவின் முதலாவது உன்னத சிகிச்சைக் கலைகள் நிலையமாக சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் நியமிக்கப்பட்டுள்ளது.

உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆதரவுடன் 2023ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அனைத்துலக அமைப்பான ‘ஜமீல் கலை, சுகாதார ஆய்வகம்’ இதனைத் தெரிவித்துள்ளது.

உடல்நலத்திற்கும் நல்வாழ்விற்கும் ஆதரவளிப்பதில் அரும்பொருளகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்பதை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது.

இந்த அறிவிப்பானது, சிங்கப்பூரில் வளர்ந்துவரும் கலை - சுகாதாரச் சூழலமைப்பில் தேசியக் கலைக்கூடத்தை முதன்மை நிறுவனமாக நிலைநிறுத்துகிறது என்று அதன் துணை இயக்குநர் அலிசியா டெங் குறிப்பிட்டார்.

தேசியக் கலைக்கூடம் உணர்வுசார் நல்வாழ்விற்கு ஆதரவளிக்கவும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தவும் கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. அனைத்து வயதுப் பிரிவினர்க்கும் வெவ்வேறு பின்னணி உடையோர்க்கும் ஏற்றதாகவும் அந்த அரும்பொருளகம் விளங்குகிறது. புலன்சார் தேவையுடைய பார்வையாளர்களுக்காக 2022 ஜூன் மாதம் ‘அமைதி அறை’ (calm room) ஒன்றை அது தொடங்கியது.

தேசியக் கலைக்கூடத்திற்குக் கிடைத்துள்ள இந்தச் சிறப்பானது, நாட்டின் பொதுச் சுகாதாரத்தில் கலைகளின்மூலம் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்குடன் சிங்கப்பூர் எடுத்துவரும் பல்லாண்டுகால முயற்சியின் தொடக்கத்தைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் ஜமீல் ஆய்வகத்தின் நிறுவனர் ஸ்டீஃபன் ஸ்டேப்பல்டன் தெரிவித்தார்.

தேசியக் கலைக்கூடத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 8) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “கொவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தில் பல பில்லியன், சொல்லப்போனால் டிரில்லியன் டாலர் கணக்கில் மருந்துத் துறையில் பணம் கொட்டப்பட்டது. அச்சமயத்தில், நமது மனநலத்தில் கலை எத்தகைய பங்கை ஆற்ற முடியும் என்பதை உணர்ந்தோம்,” என்றார்.

ஆய்வகத்தின் சிகிச்சைக் கலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான சிங்கப்பூர் சிகிச்சைக் கலைகள் என்ற திட்டத்துடன் இந்த ஒத்துழைப்பு தொடங்குகிறது. பராமரிப்பு முறைகளுடன் கலைகளை இணைக்க சிகிச்சைக் கலைகள் திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

சிங்கப்பூர் சிகிச்சைக் கலைகள் இயக்கமானது டிசம்பர் 8 முதல் 12 வரை இடம்பெறுகிறது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இசை மையமும் சேர்ந்து நடத்தும் இந்த இயக்கம், யோங் சியூ தோ இசைப் பள்ளி, நன்யாங் நுண்கலைப் பயிலகம், சிங்கப்பூர்க் கலைப் பல்கலைக்கழகம், ஜமீல் கலை, சுகாதார ஆய்வகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

உலகச் சுகாதார நிறுவன மேற்கு பசிபிக் வட்டார அலுவலகத்தின் தொழில்நுட்ப அலுவலரான ஏப்ரல் லீ கூறுகையில், “சில நேரங்களில், கலைகளையும் நம் உடல்நலம், நல்வாழ்வையும் நாம் தொடர்புபடுத்துவதில்லை. ஆனால், இவ்விரு துறைகளும் சேர்ந்து பணியாற்றுவது பெரும்பயனை அளிக்கும். நாம் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்