தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வார இறுதியிலும் தொடர்ந்த தேசிய தினக் கொண்டாட்டம்

2 mins read
47620eff-7173-474a-ad98-6cb9d0becb7f
பொங்கோலில் இடம்பெற்ற தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் விளையாட்டுகளும் இடம்பெற்றிருந்தன. - படம்: த. கவி
multi-img1 of 6

மழைவிட்டாலும் தூறலை ரசிப்பதுபோல தேசிய தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மறுநாளும் பல வட்டாரங்களிலும் மக்கள் கழகத்தின் சார்பில் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.

‘ஒரே இல்லம்’ (one Home) எனும் கருப்பொருளில் பொங்கோல் வட்டாரத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பல இன மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

மாலை நான்கு மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி, இரவு ஒன்பது மணியளவில் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, மூத்த துணை அமைச்சர்கள் கோ பூ கூன், ஜனில் புதுச்சேரி, டெஸ்மண்ட் டான், துணை அமைச்சர் சுன் ஷூவெலிங், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அடித்தள அமைப்புகளின் ஆலோசகர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் விளையாட்டுகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

பல்லினக் கலாசாரத்தைப் பறைசாற்றும் இசை, நடன நிகழ்வுகளும் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.

ராணுவம், காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை உள்ளிட்ட வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், பல்வேறு பகுதிகளில் உள்ள 59 வீடுகளிலும், குடியிருப்பாளர் கட்டமைப்புகளிலும் இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், அதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

நண்பர்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற டிபிஎஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களான வைஷ்ணவும் அனகாவும், “உணவு, விளையாட்டுகள், நிகழ்வுகள் உற்சாகமளிக்கும் வகையில் உள்ளன,” என்றனர்.

தங்கள் குழந்தையுடன் வந்திருந்த ஹரிசீலன், 26 - ஷாலினி கிரிஷ், 29, இணையர், தேசிய தினக் கொண்டாட்டங்களின் நீட்சியாக இந்நிகழ்வைப் பார்க்கிறோம் என்றும் பலருடன் இணைந்து கொண்டாடுவது நல்ல அனுபவம் என்றும் கூறினர்.

பாசிர் ரிஸ் பகுதியிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தார் ஆசிரியரான அனிதா.

“நேற்று தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தோம். இன்று பலருடன் இணைந்து கொண்டாட ஆவலாக இருந்ததால் தொலைவைக் கருதாது இங்கு வந்துள்ளோம். என் மகன் ராணுவ வாகனங்களைக் கண்டு வியப்பதையும் குதூகலத்துடன் விளையாடுவதையும் காண மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் திருவாட்டி அனிதா.

குறிப்புச் சொற்கள்