தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய கீதத்தின் வரிகளிலிருந்து விரியும் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்

2 mins read
20b78ff0-d97b-42ab-b1e8-60c78e7734d6
‘முன்னேறட்டும் சிங்கப்பூர்’ எனும் கருப்பொருளை ஒட்டி சமூகக் குழுக்களைச் சேர்ந்த தொண்டூழியர்கள், மாணவர்கள் உட்பட ஏறத்தாழ 39 கலைஞர்கள், 3,000 பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கின்றனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசிய கீதத்தை மையமாகக் கொண்டு இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பாடாங்கில் சிறப்பாக அரங்கேறவுள்ளன.

இசை, நடனம், கண்ணைக் கவரும் வண்ணங்கள், மனத்தைப் பறிக்கும் வாணவேடிக்கைகள் என ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய கீதத்தில் வரும் நான்கு வரிகளை அடிப்படையாக கொண்டு நிகழ்ச்சி நான்கு அங்கங்களாக படைக்கப்படும்.

ஒவ்வோர் அங்கத்திலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குறும்படங்களின் தொடர் அவ்வப்போது காட்சிப்படுத்தப்படும்.

‘முன்னேறட்டும் சிங்கப்பூர்’ எனும் கருப்பொருளை ஒட்டி சமூகக் குழுக்களைச் சேர்ந்த தொண்டூழியர்கள், மாணவர்கள் உட்பட ஏறத்தாழ 39 கலைஞர்கள், 3,000 பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கின்றனர். 

“இவ்வாண்டின் கொண்டாட்டங்கள்வழி நமது வரலாறு, அடையாளத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் சிங்கப்பூரர்களுக்கு ஏற்படும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிக் குழுவை வழிநடத்தும் கர்னல் எட்வின் சுவா.

இவ்வாண்டிற்கான கொண்டாட்டங்களில் முதன்முறையாக 360 டிகிரி பார்வையுடன் ஆகப் பெரிய ‘நடமாடும் மேடை’ ஒன்று பாடாங் மேடையில் எழுப்பப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஏழு மீட்டர் உயரம், 15 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேடை கொண்டாட்டங்களைப் பொதுமக்கள் அருகிலிருந்து பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கூடுதலான மேடைகளும் எல்இடி திரைகளும் பார்வையாளர்களுக்காக நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உடற்குறையுள்ள கலைஞர்கள் வடிவமைத்த படைப்புகள் இவ்வாண்டு எட்டு நீர், நில மிதவைகளாக பாடாங், மரினா பே வளாகங்களில் வலம் வரவிருக்கின்றன.

‘தி ஃபுல்லர்ட்டன்’ ஹோட்டல், ‘யுஓபி பிளாசா ஒன்’ போன்ற புகழ்பெற்ற கட்டட முகப்புகளில் இடம்பெறும் ‘எஸ்ஜி60’ ஒளிப்படைப்புகள் கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்ட உள்ளன. இந்த ஒளிப்படைப்புகளை வரும் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறும் தேசிய கல்விக் காட்சியின்போது மக்கள் முதல்முறையாக காணலாம்.

மக்கள் கழகத்திலிருந்து பங்குபெறும் கிட்டத்தட்ட 400 தொண்டூழியர்களில் ஜெனிஃபர் தேவஜென்னர், 66 - மேத்யூ எஸ்.டி. சுனில், 49, இணையரும் அடங்குவர். கடந்த ஏழு ஆண்டுகளாகத் தேசிய தினக் கொண்டாட்டங்களில் கணவன்-மனைவியாக இணைந்து பங்குபெற்று வரும் அவர்கள் இவ்வாண்டிற்கான கொண்டாட்டங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறினர்.

“தம்பதியாக நாங்கள் நேரம் போன்ற பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அனைவரும் சிங்கப்பூரின் 60வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக ஒன்றிணைவது ஒரு மறக்க முடியாத அனுபவம்,” என்றார் திரு மேத்யூ.

பங்கேற்பாளர்கள் தவிர தேசிய தின அணிவகுப்பைக் காணத் திரண்டு வரும் கூட்டத்தினர்க்கு உற்சாகமூட்ட தொண்டூழியர்களும் மாணவர்களும் தயாராகி வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான மாணவி சதீஸ் பாபு லட்சுமி பிரபா, 17, கொண்டாட்டங்களில் முதல்முறையாக பங்கேற்கும் அனுபவம் குறித்துத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

“தேசிய தினத்தன்று மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப மக்களை மேலும் உற்சாகமடையச் செய்வேன்,” என்றார் லட்சுமி.

குறிப்புச் சொற்கள்