புத்தம் புதிய அங்கங்களுடன் இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு 2025 பாடாங் திடலுக்கு அப்பால் மரினா பே பகுதியிலும் கோலாகலமாக அரங்கேறவுள்ளது.
‘முன்னேறட்டும் சிங்கப்பூர்’ என்ற கருப்பொருளில் களைகட்டவுள்ள தேசிய தின அணிவகுப்பு, சுதந்திரம் பெற்றபின் சிங்கப்பூரின் 60 ஆண்டுப் பயணத்தைப் பறைசாற்றுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் இல்லாத அளவில் மிக அதிகமான அணிகள் இவ்வாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும்.
அணிவகுப்பில் இடம்பெறும் தேசியக் கொடியைப் பறக்க விடுதல், தேசத்திற்கு மரியாதை (வான்திறன் காட்சி), அதிபருக்கான 21 மரியாதை குண்டு முழக்க அங்கங்களுக்குப்பின், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் ஒரு தனித்துவமான வான்காட்சி அங்கம் இடம்பெறும்.
ரெட் லயன்ஸ் சிவப்புச் சிங்க வான்குடை வீரர்கள் பாடாங் திடலில் தரையிறங்கும் அதே நேரம் சிங்கப்பூர்க் குடியரசு கடற்படை முக்குளிப்பாளர்கள் மரினா பே கடற்பகுதியில் இறங்குவர். இந்த அங்கம் கடைசியாக 2018ஆம் ஆண்டு அணிவகுப்பில் இடம்பெற்றது. ஆறாண்டுகளுக்குப் பிறகு ‘நமது பலம், நமது மக்கள், நமது எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்பு பாடாங் திடலில் வலம் வரும். சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் உள்துறைக் குழுவின் ராணுவ வாகனங்கள் இதற்கு பயன்படுத்தப்படும்.
“சிங்கப்பூரர்கள் கடந்த அணிவகுப்புகளில் இந்த அங்கங்களை மிகவும் ரசித்தனர். அதனால் அவற்றை நாங்கள் மீண்டும் இவ்வாண்டு கொண்டு வருகிறோம்,” என்றார் தேசிய தின அணிவகுப்பு 2025 ஏற்பாட்டு குழுத் தலைவர் கர்னல் சோங் ஷி ஹாவ்.
தேசிய கீதத்தின் 4 வரிகளை மையமாகக் கொண்டு கொண்டாட்டத்தில் 4 அங்கங்கள் நடைபெறும். உள்ளூர் கலைஞர்கள் உட்பட இதர சிங்கப்பூர் பள்ளிகளும் அமைப்புகளும் மக்கள் கண்களுக்கும் செவிகளுக்கும் இனிய விருந்து அளிக்கவிருக்கின்றனர்.
‘ஹியர் வி ஆர்’’ எனும் தேசிய தின 2025ஆம் ஆண்டின் அதிகாரத்துவப் பாடலை சார்லி லிம், கிட் சான், ‘தி ஐலண்ட் வாய்சஸ்’ இசைக்குழு ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர். ஒரு பள்ளி மண்டபத்தின் பின்னணியில் இடம்பெறும் இந்தப் பாடலை இயக்கியவர் ஹெ ஷுமிங். தேசிய தின அணிவகுப்பு சிறப்புச் சின்னத்தில் இடம்பெறும் ‘60’ என்ற எண் ‘GO’ என்ற சொல்லைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அது, சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ‘முன்னோக்கிச் செல்லவேண்டும்’ என்பதைக் குறிக்கிறது.
சின்னத்தில் தென்படும் ஐந்து நட்சத்திரங்கள், ஜனநாயக சமுதாயம், அமைதி, முன்னேற்றம், நீதி சமத்துவம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
மரினா பே வரை நீளும் மகிழ்ச்சி
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு முதல்முறையாக மரினா பே வரை விரிவுபடுத்தப்படவுள்ளது. மரினா பே வளாகத்தில் எழுப்பப்படும் புதிய ‘மொபைல்’ மிதக்கும் மேடையில் நடைபெறும் அங்கங்கள் பாடாங் திடலின் நேரலை கொண்டாட்டங்களுடன் ஒத்திசைக்கப்படும்.
அதுமட்டுமின்றி மரினா பே வளாகத்தை சுற்றியுள்ள 5 இடங்களில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தின அணிவகுப்பின் நேரலைகள் இடம்பெறும்.
1) மரனா பே கடல்முனை (The Promontory)
2) பேஃபிரண்ட் நிகழ்ச்சித் திடல் (Bayfront Event Space)
3) கரையோரப் பூந்தோட்டங்களின் ஆகப்பெரிய வெளிப்புற பூங்காவெளியான ‘த மெடோ’ (The Meadow at Gardens by the Bay)
4) மரினா அணைக்கட்டு (Marina Barrage)
5) சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் (Singapore Sports Hub)
குடியிருப்புப் பேட்டைகளில் களைகட்டும் கொண்டாட்டம்
தேசிய தினம் 2025 கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் தொடரும். தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்டைகளில் இராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்பையும் மக்கள் கண்டு மகிழலாம்.
வாணவேடிக்கைகள், ஆளில்லா வானூர்தி அங்கங்கள், நிகழ்ச்சிகள், குடும்பங்கள் பங்குபெற கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியனவும் இடம்பெறும்.
சமூக ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கும் தேசிய தினம்
உலகிலுள்ள சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றுபட்டு 60ஆவது தேசிய தினத்தைக் கொண்டாட ஆகஸ்ட் 9ஆம் தேதி ‘ஒரு மாஜுலா கணம்’ எனும் முன்முயற்சி இடம்பெறும்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் பொது எச்சரிக்கை முறை தீவு முழுதும் ஒலிக்கும் வேளையில், எல்லா சிங்கப்பூரர்களும் கூடி உறுதிமொழி எடுக்கவும் தேசிய கீதம் பாடவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் நேர்காணல் வழியாக இந்த நிகழ்வில் பங்கேற்கலாம்.
ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமும் இலவசமாக ஒரு சிங்கப்பூர் கொடியை ‘ஷாப்பி’ வணிகத் தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய தினக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ள வழியில் வழிநடத்த #GiveAsOneSG முயற்சிவழி இதர அமைப்புகள் தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இந்த முயற்சி ஜூன் 10ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இடம்பெறும்.
giving.sg என்ற இணையத்தளம் வழியாகச் சிங்கப்பூரர்கள் அந்நடவடிக்கையில் பங்கேற்கலாம்.
தேசிய தின அணிவகுப்பு 2025 தொடர்பான கூடுதல் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.