ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் ‘சிக்ளப் ஒளட்ஃபால்’ (Siglap Outfall) பகுதியில் சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை நடந்த கொணடாட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஜூ சியட் வட்டாரவாசிகள் பங்கேற்றனர். நடை, தேசிய தின நிகழ்ச்சி ஆகியவை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடைபெற்றன.
ஈஸ்ட் கோஸ்ட் வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பு, ஜூ சியட் குடியிருப்பாளர் ஆலோசனைக் குழு ஆகியவை இக்கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தன. 20 பேரைக் கொண்ட குழு மூன்று மாதங்களாக இதற்குத் திட்டமிட்டது.
அக்குழு, சமூகப் பங்காளிகள், பள்ளிகள், தொண்டூழியர்கள் ஆகிய தரப்புகளுடன் இணைந்து செயல்பட்டது.
கொண்டாட்டத்தின் தேசிய தின நிகழ்ச்சியில் சட்ட அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சரும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான (ஜூ சியட்) ஆலோசகருமான எட்வின் டோங் கலந்துகொண்டார்.
“தேச வளர்ச்சியையும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் புதிய அத்தியாயத்தையும் எஸ்ஜி60 சித்திரிக்கிறது; சுதந்திரம் அடைந்தது, முன்னோக்குப் பார்வையுடன் தியாகம் செய்த நமது முன்னோடிகள் போட்ட வலுவான அடித்தளங்கள் ஆகியவற்றைக் கொண்டாடும் நிகழ்வாக அமைகிறது. அதேவேளை, மேலும் சிறப்பான, வலுவான, கூடுதல் ஒன்றுமையான வருங்கால சிங்கப்பூரை உருவாக்குவதற்கு நாம் மீண்டும் முயற்சி எடுக்க வேண்டிய நேரமாகவும் இந்த தேசிய தினம் விளங்குகிறது. எப்படி நமது முன்னோடிகளிடமிருந்து துடிப்பான, ஒற்றுமையான, படிப்படியாக முன்னேறும் சிங்கப்பூரை நாம் பெற்றோமோ அதேபோல் வருங்காலத் தலைமுறையினரும் இன்னும் மேம்பட்ட சிங்கப்பூரில் தொடர்ந்து வளர்ச்சி காண்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் அமைச்சர் எட்வின் டோங்.