தேசிய தின அணிவகுப்பைக் காண்பதுபோல சிங்கப்பூரர்கள் இனி தங்கள் வீடுகளுக்கு அருகே உணரலாம்.
பீஷான், பொங்கோல், ஈசூன், கேலாங் சிராய், புக்கிட் கோம்பாக் ஆகிய குடியிருப்புப் பேட்டைகளில் ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று அந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அந்த இடங்களுக்கு கிட்டதட்ட 60 வாகனங்கள் பவனி வந்தும் போர்விமானங்கள் பறந்தும் செல்லவுள்ளன.
பீஷானில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் வான்குடை சாகசக்குழுவின் செஞ்சிங்கங்களும் தரையிறங்கவுள்ளனர்.
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, இந்தக் கொண்டாட்டங்கள், பீஷான் ஜங்ஷன் 8, ஒன் பொங்கோல், ஃபுட்சால் அரீனா@ஈசூன் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் நடைபெறவுள்ளன.
இதற்கான நுழைவுச்சீட்டுகளைப் பொதுமக்கள் தீவெங்குமுள்ள 113 சமூக மன்றங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் இரண்டு நுழைவுச்சீட்டுகள் வரை பெறலாம். பங்கேற்கும் ஒவ்வொருவரும் தேசிய தின அணிவகுப்புப் பையைப் பெறுவர்.
சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 60 வாகனங்கள் ஐந்து குழுக்களாகப் பிரிந்து, நகர மத்தியிலிருந்து வெவ்வேறு குடியிருப்புப் பேட்டைகளை நோக்கிப் புறப்படும். அந்தக் குழுக்கள் மொத்தமாக 180 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்துச் செல்லும்.
தொடர்புடைய செய்திகள்
இவற்றின் நகர்வை உடனுக்குடனே காண்பிக்கும் அம்சத்தை தேசிய தின அணிவகுப்பின் இணையத்தளம் கொண்டிருக்கும்.
ஜூரோங் டவுன் ஹால் பேருந்து நிலையம் (பிற்பகல் 2.10 மணி முதல் 3 மணி வரை), கிராஞ்சி தொடக்கப்பள்ளி (பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை), சிஎச்ஐஜே தோ பாயோ தொடக்கப்பள்ளி மற்றும் சிஎச்ஐஜே உயர்நிலைப் பள்ளி (பிற்பகல் 2.20 மணி முதல் 3.40 மணி வரை), ஹவ்காங் பேருந்து நிலையம் (பிற்பகல் 2.50 மணி முதல் 3.40 மணி வரை), தெம்பனிஸ் கான்கோர்ஸ் பேருந்து முனையம் (பிற்பகல் 1.30 மணி முதல் 2.50 மணி வரை) ஆகிய இடங்களில் அந்த வாகன அணிவகுப்பு நிற்கும்.

