தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தின அணிவகுப்பின் முன்னோட்டக் காட்சி களைகட்டியது

2 mins read
662b0487-f709-4364-903e-1117dba63ee7
பாடாங்கிற்குச் செல்வதற்கு முன்பு சனிக்கிழமை (ஜூலை 12) இறுதி ஒத்திகையில் ஈடுபடும் மாணவர்களும் பயிற்றுநர்களும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தின அணிவகுப்பின் முன்னோட்டக் காட்சி என்று கருதப்படும் தேசிய கல்விக் காட்சி மூன்றாவது முறையாக சனிக்கிழமை (ஜூலை 12) பாடாங்கில் நடைபெற்றது.

இவ்வாண்டு மொத்தம் நான்கு தேசிய கல்விக் காட்சிகள் இடம்பெறும். கடைசி காட்சி அடுத்த சனிக்கிழமை (ஜூலை 19) நடைபெறும்.

சில சாலைகள், தடங்கள் வாகனங்களுக்கும் பொதுமக்கள் நடப்பதற்கும் மூடப்பட்டிருந்தன.

இரண்டாவது தேசிய கல்விக் காட்சியில் கிட்டத்தட்ட ​​​​27,000 தொடக்கநிலை 5 மாணவர்களும் உயர்நிலை 3 மாணவர்களும் வெயில் பாராது திரண்டனர்.

தேசிய தின அணிவகுப்பு, வண்ணமயமான நிகழ்ச்சி அங்கங்களை மாணவர்கள் கண்டுகளித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற வாணவேடிக்கைகள் பல இளம் நெஞ்சங்களை நெகிழ வைத்தன.

சிறார் முதல் மூத்தோர் வரை இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏறத்தாழ 3,000 கலைஞர்கள் பாடாங்கில் மேடையேறவிருக்கின்றனர்.

சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி நிலையத்தில் சனிக்கிழமை தேசிய கல்வி காட்சிக்கு முன் திரைக்கு பின்னால் நடக்கும் தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்தியாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், மக்கள் கழக தொண்டூழியர்கள், சோக்கா காக்காய் சிங்கப்பூர் பௌத்த சமய குழு உறுப்பினர்கள், இதர பள்ளி மாணவர்கள் அனைவரும் எவ்வாறு தேசிய தினக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகின்றனர் என்று காண்பிக்கபட்டது.

“ஒவ்வொரு நாளும் கலைஞர்கள் நன்கு கவனிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்றார் நிகழ்ச்சி அங்கங்களின் ஆதரவாளர் கர்னல் இங் எங் பிங்.

அப்படி கவனித்துக்கொள்வதால் அனைத்துக் கலைஞர்களுக்கும் ஊக்கம் பிறக்கும் என்றும் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் தன் அண்ணன் பங்கேற்றதை தொடர்ந்து தானும் பங்கேற்க வேண்டும் என்று நினைத்தார் சீனிவாசன் ஷிவ் சித்தார்த், 17.

அவருடைய கனவு இவ்வாண்டு நிறைவேறியது.

“முதன்முறையாக தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது ஒரு புதுமையான, மிகவும் உற்சாகமான அனுபவமாக இருக்கிறது,” என்று தமிழ் முரசுடன் பகிர்ந்தார் அந்த ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்.

நாள்கள் செல்லச் செல்ல உற்சாகம் இருந்தபோதிலும் சற்று சோகமாக இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

“ஆகஸ்ட் 9க்கு பிறகு இந்த அற்புதமான தருணத்தை என்னால் எண்ணிப் பார்க்க முடியாது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்