சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் தேசிய தின அணிவகுப்பு 2024ன்போது பாடாங்கில் இசையும் ஒளியும் அலை அலையாகச் சுழன்றன.
‘ஒன்றாய், ஒன்றுபட்ட மக்களாய்’ என்ற அணிவகுப்பின் கருப்பொருளுக்கு இணங்க, பலதரப்பட்ட மக்களும் தேசிய தினப் பாடல்களைப் பாடி, உற்சாகத்துடன் கூவி கொண்டாட்ட உணர்வில் கலந்தனர்.
அணிவகுப்பு நடந்த நேரத்தில், சிங்கப்பூர்க் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 2,000 பேர் பாடாங் வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பை உறுதிசெய்தனர்.
ஐந்து மணியளவில் ஏறத்தாழ 27,000 பார்வையாளர்கள் திரண்டு நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் பிரிவுகளில் உள்ள வெளியரங்கு இருக்கைகளில் அமர்ந்து கொண்டாட்ட உணர்வில் இணையக் காத்திருந்தனர். புரோமோன்டரியில் ஏறத்தாழ 8,000 பேர் கூடி அங்கு நடந்த கொண்டாட்டத்தில் திளைத்தனர்.
அணிவகுப்பு தொடங்குமுன் மேகம் திரண்டு, பெருமழை பெய்தும் அவர்களின் தேச உணர்வு சற்றும் ஒளிமங்கவில்லை.
முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களான சமூகம், குடிமை, பொருளியல், ராணுவம், உளவியல், மின்னலக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆறு வடிவங்களைக் கொண்ட தேசிய தின அன்பளிப்புப் பைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அணிவகுப்பின் நெறியாளர்களான வானொலிப் படைப்பாளர் ஜோக்கிம் கோமெஸ், உள்ளூர்க் கலைஞர் எபி சங்கரா, படைப்பாளர் சோனியா சியூ, நடிகை சித்தி கலீஜா ஆகியோர் பார்வையாளர்களை வரவேற்று, அவர்களது ஆவலைத் தூண்டினர்.
பார்வையாளர்களும் ‘தண்டர் ஸ்டிக்ஸ்’ எனும் பலூன் கோல்களைத் தட்டியபடி, உற்சாக ஆரவாரம் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
முதலில், குவீன்ஸ்வே, நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 220 மாணவர்களைக் கொண்ட வாய்ப்பாட்டுக் குழு, ‘எங்கள் சிங்கப்பூர்’, ‘ராசா சாயாங்’, ‘சிங்கப்பூரா சன்னி ஐலண்ட்’ போன்ற நாட்டுப்பற்றுப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.
பின்னர், அணிவகுப்புக் குழுக்களுடன், மெர்லயன், ஷேரட்டி எலிஃபன்ட், கனிவன்புக்கான சிங்கா, ஃபேமலிஸ் ஃபார் லைஃப் பெக்கி பன்னி, ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூரின் நீலா, கேப்டன் கிரீன் ஆகியவற்றின் உருவந்தாங்கிய பெரிய பலூன்கள் அணிவகுப்புச் சதுக்கத்தில் வலம் வந்தன.
பின்னர், நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்குடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவகுப்பிற்கு வருகை தந்தனர்.
அதனைத் தொடர்ந்து, எட்டுச் செஞ்சிங்க வான்குடை வீரர்கள், சி-130 விமானத்திலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் உயரத்திலிருந்தபடி வான்குடை மூலம் தரையிறங்கினர். செஞ்சிங்க அணி தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றது இது 35ஆவது முறை.
இந்த அங்கத்திற்காக தங்களைத் தயார்ப்படுத்த வான்குடை சாகச வீரர்கள் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 500 முறை வான்குடைகளிலிருந்து குதித்து பயிற்சி பெற்றனர்.
‘தி ஐலண்ட் வாய்சஸ்’ மற்றும் ‘மியூசிக், டிராமா கம்பெனி’ குழுவினர், தேசிய தினப் பாடல்களைப் பாடிய பிறகு, ராணுவ இசைக்குழுவினர் அணிவகுத்தனர்.
பிரதமர் என்ற முறையில் முதன்முறையாக அணிவகுப்பில் கலந்துகொண்ட திரு லாரன்ஸ் வோங் மாலை 6.40 மணிக்கு அரங்கத்தை வந்தடைந்தார். சிங்கப்பூர்ப் பிரதமராக 20 ஆண்டுகள் இருந்த லீ சியன் லூங், முதன்முறையாக மூத்த அமைச்சராக இருந்து அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
சரியாக 6.47 மணிக்கு அணிவகுப்பிற்கு வந்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம். சிங்கப்பூர் அதிபராக அவர் அணிவகுப்பில் பங்கேற்றது இதுவே முதன்முறை.
முப்படைகள், காவல்துறை, குடிமைத் தற்காப்பு, சமூக, பொருளியல், இளையர் பிரிவுகளைச் சேர்ந்த 35 அணிவகுப்புப் பிரிவுகளுக்கு அடுத்து, கொடியணியின் அணிவகுப்பு இடம்பெற்றது. அந்த அணிகளுடன் மரியாதைக் காவல் அணியின் அணிவகுப்பு இணைந்து அதிபரை வரவேற்றது.
அணிவகுப்புத் தளபதி கர்னல் ரோஜர் சியோங் சூன் யோங்கின் தலைமையிலான அணிவகுப்புப் படையினரைத் திரு தர்மன் பார்வையிட்டார்.
தேசிய தின அணிவகுப்பில் அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்க அங்கத்தில், 23 மற்றும் 35ஆம் பீரங்கிப் படைப்பிரிவுகளைச் சேர்ந்த 169 வீரர்கள் இடம்பெற்றனர்.
நான்கு 25-பவுண்டர் பீரங்கிகளைத் தாங்கும் ‘எம்3ஜி’ மிதவைப் பாலம், இதுவரையில் அணிவகுப்பிற்கான ஆக அதிகத் தொலைவாக 5.87 கிலோமீட்டருக்கு ‘மரினா பேசின்’ எனப்படும் மரினா நீர் வடிநிலத்தைச் சுற்றி வந்தது. அந்தப் பீரங்கிகள், அதிபருக்காக 21 குண்டுகளை முழங்கி மரியாதை செலுத்தின.
அந்நேரத்தில் அரங்கமே ஒருசேர தேசிய கீதத்தை முழங்க, ‘சிஎச்-47எஸ்டிஃஎப் ஹெவிலிஃப்ட்’ ஹெலிகாப்டர் சிங்கப்பூர்க் கொடியை ஏந்தி, நாட்டுப் பற்றுணர்வை வானத்திற்கும் கொண்டுசென்றது. அந்த ஹெலிகாப்டருக்குத் துணையாக இரு ‘ஏஎச்-64டி அப்பாச்சி அட்டாக்’ ஹெலிகாப்டர்கள் உடன் பறந்தன.
அதன்பிறகு F-16 போர்விமானங்கள் பாடாங்கிற்கு மேலுள்ள வான்வெளியில் பறந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
பின்னர், முழுமைத் தற்காப்பு அங்கம் அரங்கேறியது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அங்கம், முழுமைத் தற்காப்பின் 40ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அணிவகுப்பில் கிட்டத்தட்ட 400 பங்கேற்பாளர்களும் அணிவகுப்புச் சதுக்கத்திற்குள் புகுந்தனர்.
ஆகாயம், நிலம், கடல், குடிமை மற்றும் மின்னிலக்க வெளியில் ஏற்படும் மிரட்டல்களும் இடையூறுகளும் இந்த அங்கத்தில் சித்திரிக்கப்பட்டன.
சிங்கப்பூரின் முப்படைகளுடன் காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை, மின்னிலக்க மற்றும் புலனாய்வுச் சேவையுடன் பொதுப் பயனீட்டுக் கழகமும் முதன்முறையாகக் கலந்துகொண்டு, அவசரகாலங்களில் தண்ணீர் தற்காலிகமாக எப்படி விநியோகிக்கப்பட்டது என்பதை விளக்கிக் காட்டியது.
மரினா பே வட்டாரத்தில் கடலோரக் காவல்படையினர் விரைவாக மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையையும் முக்குளிப்பாளர் வெடிகுண்டு ஒன்றைச் செயலிழக்கச் செய்ததையும் பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
சதுக்கத்தில் அணிவகுத்துச் சென்ற 16 துணைக்குழுக்களும், பார்வையாளர்கள் அரங்கிலுள்ள படிகளில் ஏறும் ‘ஓன்வோர்ட் மார்ச்’ என்ற அங்கம் முதன்முறையாக இடம்பெற்றது.
முழுமைத் தற்காப்பு அணிவகுப்புக்குப் பிறகு, ஏழு மணியளவில் 59 முறை மேளம் ஒலிக்க, நான்கு அத்தியாயங்களைக் கொண்ட கலைநிகழ்ச்சி அங்கம் தொடங்கியது.
பல வண்ணங்களில் மின்னிய 12 ‘எல்இடி’ ஒளித்திரைகள் சூழ, 3,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து அவ்வங்கத்தைப் படைத்தனர்.
ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் நடந்த கலை அங்கத்தில், நேரடி நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்கள் நாட்டுப்பற்றையும் சமூக உணர்வையும் போற்றும் குறும்படங்களையும் கண்டுகளித்தனர்.
சிங்கப்பூரின் வரலாறு, பண்புகள், எதிர்காலம் தொடர்பில் நான்கு அங்கங்களாக தேசிய தின அணிவகுப்பின் கலைநிகழ்ச்சி அங்கம் உருவாக்கப்பட்டது. விறுவிறுப்பான பல பாணி இசையுடன் இந்த நான்கு அங்கங்களும் முறையே, முன்னோடிகளின் அசையா உறுதி, சிங்கப்பூரின் உணவு பன்முகத்தன்மை, சமூகத்தின் பரிவுமிக்கதன்மை, எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஆகியவற்றைப் பறைசாற்றின.
தேசிய தின அணிவகுப்பு, 2022க்குப் பிறகு பாடாங் திடலில் இரண்டாவது முறையாக இம்முறை நடைபெற்றது. இதற்கு முன்னதாக அணிவகுப்பு நடைபெற்ற மரினா பே மிதக்கும் மேடை, 2027க்குள் தேசிய சேவை சதுக்கமாக உருமாற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, வாணவேடிக்கைகளால் வானம் பல வண்ணங்களில் ஒளிர்ந்தது. கண்களுக்கு விருந்தளிக்கும் அணிவகுப்பு எப்படிப் பல வண்ணங்கள் சேர்ந்து அழகு சேர்த்ததோ, அதுபோல் சிங்கப்பூரும் அதன் பன்முகத்தன்மையால் பொலிவு பெறுகிறது என்பதை உணர்த்தும்படியாகத் தேசிய தினக் கொண்டாட்டங்கள் அமைந்தன.