சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தேசிய தின விளையாட்டு விழாவிற்கு இதுவரை இல்லாத வகையில் ஆகப் பெரிதாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) ஏற்பாடு செய்திருந்தது.
நான்காவது முறையாக நடைபெற்ற இவ்விழா, பாலஸ்டியர் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.
சிறுவர்கள், முதியவர்கள், சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டு விளையாட்டின்வழி சமூக ஒற்றுமையையும் இணக்கத்தையும் கொண்டாடினர்.
விளையாட்டுகளின் வாயிலாக ஒற்றுமையையும் குழு உணர்வையும் நீண்ட காலமாக ஊக்குவித்துவரும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் முயற்சிகளைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் பாராட்டினார்.
“இந்தச் சங்கத்தின் தனித்துவம் என்னவென்றால், இங்கு நடைபெறும் அனைத்து விளையாட்டுகளும் குழு விளையாட்டுக்களாகும். ஒருவர் எவ்வளவு திறமையுடையவராக இருந்தாலும், வெற்றி பெறுவதற்கு ஒட்டுமொத்தக் குழுவின் ஒருமைப்பாடு அவசியம்.
“இது சிங்கப்பூரின் கதைக்கும் பொருந்தும். நாம் ஒற்றுமையாகச் செயல்பட்டால், எந்த உயரத்தையும் எட்ட முடியும்,” என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டின் விழாவில், வழக்கமான விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் கூடுதலாக, சங்கம் ஒரு கேளிக்கைச் சந்தையையும் அமைத்திருந்தது. அதில் உணவு, விளையாட்டுச் சாவடிகள், சிறுவர்களுக்காக பலூன் கோட்டை போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. விழாவில் பங்கேற்ற வசதிகுறைந்த குடும்பங்களுக்குக் கேளிக்கைச் சந்தையில் பயன்படுத்துவதற்குரிய இலவசப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
“ஆண்டுதோறும் நாங்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளை மட்டும் நடத்துவோம். ஆனால் இவ்வாண்டு எஸ்ஜி60யைச் சிறப்பாகப் பிரதிபலிக்கக்கூடிய புதுமையான அம்சத்தைச் சேர்க்க விரும்பினோம். இன்றைய விழா உண்மையான ‘குடும்ப தினம்’ என்று கூறலாம்,” என்றார் சங்கத் தலைவர் தமிழ்மாறன்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “பலர் இந்தச் சங்கம் இந்தியர்களுக்கு மட்டுமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்குச் சீனர், மலாய்க்காரர் உள்ளிட்ட பல இனத்தவரையும் காணலாம். எங்கள் சங்கம் அனைவரையும் வரவேற்கிறது,” என்று அவர் கூறினார்.
விழாவில் வழக்கமான காற்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் விளையாட்டுகளுடன் ‘ஃபுட்சால்’ போட்டிகளும் நடைபெற்றன. மேலும், புதிய முயற்சியாக பெண்களுக்கு, குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ‘கேப்டன்ஸ் பால்’ போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பங்கேற்பாளர்களில் சிலர் காலை 10 மணி முதல் மழையையும் பொருட்படுத்தாமல் விளையாட்டில் ஈடுபட்டனர்.
“இது வெறும் விளையாட்டு நிகழ்ச்சி என்பதற்கும் அப்பால், கடந்தகால நினைவுகளை உயிர்ப்பித்து, குடும்பங்களை ஒன்றுசேர்க்கும் தளமாக அமையும் என்று நம்புகிறோம். இன்று மூத்தோர் பலர் தங்களின் பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுகிறார்கள்,” என்று தமிழ்மாறன் குறிப்பிட்டார்.
‘கேப்டன்ஸ் பால்’ போட்டியில் பங்கேற்ற 61 வயதான திருவாட்டி கிருஷ்ணசாமி சரோஜனி நாயுடு, கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் ஒருமுறை தொடர்ந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
“இங்கு விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. புதிய நண்பர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். இத்தகைய முயற்சிகள் மனத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது,” என்று அவர் கூறினார்.
பல தலைமுறைப் பெண்கள் ஒன்றாக இணைந்து விளையாடுவதைப் பார்ப்பது தனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுப்பதாக இளம் பங்கேற்பாளர்களில் ஒருவரான தர்சினி துரைசாமி, 29, சொன்னார்.
“இந்த விளையாட்டுகள், அதிக உடற்பயிற்சி செய்யும் மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
விழாவின் சிறப்பு அங்கமாகச் சங்கத்தின் மேலாண்மைக் குழுவுக்கும் நாடாளுமன்றக் குழுவுக்கும் இடையே ஒரு ‘ஃபுட்சால்’ போட்டி நடைபெற்றது. இதில் போக்குவரத்து தற்காலிக அமைச்சரும் நிதிக்கான மூத்த துணையமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், நாடாளுமன்ற நாயகர் சியா கியான் பெங், மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூர் முன்னாள் காற்பந்து நட்சத்திரங்கள் ஃபாண்டி அகமது, மலீக் அவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய தின விளையாட்டு விழாவையடுத்து இரவு 7 மணிக்குச் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தனது 102வது ஆண்டுநிறைவையும் சிறப்பாகக் கொண்டாடியது.