வெப்பத் தாக்கத்தை எதிர்கொள்ள தேசிய ஆலோசனைக் குறிப்பு வெளியீடு

வெப்பத் தாக்கத்தை எதிர்கொள்ள தேசிய ஆலோசனைக் குறிப்பு வெளியீடு

2 mins read
b178c326-c092-4d51-b292-f154e36b7c38
வெப்பத் தாக்கத்தால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர் மிகுந்த கவனமுடன் இருக்கும்படி தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்தியுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, வெப்பத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான வெப்பத் தாக்க ஆலோசனைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வளிமண்டல வெப்பநிலை உயர்ந்துவரும் நிலையிலும் வரவிருக்கும் நாள்களில் வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இந்த ஆலோசனைக் குறிப்பு வெளியாகி இருக்கிறது.

குறைவு, இடைநிலை, அதிகம் என எந்த நிலையில் வெப்ப அழுத்தம் இருக்கிறது என்பதை ‘myENV’ எனும் செயலிமூலமும் weather.gov.sg என்ற இணையத்தளம் வழியாகவும் அறிந்துகொள்ளலாம்.

வெப்பத் தாக்கம் குறைவாக இருந்தால் பச்சை நிறத்திலும் நடுத்தர அளவிலிருந்தால் அரக்கு நிறத்திலும் அதிகமாக இருப்பின் சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டிருக்கும்.

கடைசி 15 நிமிடங்களில், அருகிலுள்ள வானிலை மையங்களில் பதிவான சராசரி உலக ஈரக்குமிழ் வெப்பநிலையை (wet bulb temperature) அது குறிக்கும்.

இந்த அளவானது, காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு, மனித உடல் எவ்வளவு சூடாக உணர்கிறது என்பதைக் காட்டும்.

வியர்வையின்மூலம் மனித உடல் செயல்திறமிக்க வகையில் உடலைக் குளிர்விக்க முடியாதபோது வெப்பத் தாக்கம் ஏற்படும். தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல், பதற்றம், அளவிற்கதிகமாக வியர்த்தல் உள்ளிட்டவை அதற்கு அறிகுறிகள்.

வெப்ப அலை வீசாதபோதும் வெப்பத் தாக்கம் ஏற்படலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டுள்ளது.

வெப்பம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க இந்த வெப்பத் தாக்க ஆலோசனைக் குறிப்பு இலக்கு கொண்டுள்ளது.

ஈரக்குமிழ் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குமேல் இருந்தால் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. 31 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியசுக்குள் இருந்தால் நடுத்தர அளவிலும் 31 டிகிரி செல்சியசுக்குக் கீழிருந்தால் குறைந்த அளவிலும் வெப்பத் தாக்க பாதிப்பு ஏற்படலாம்.

இதனால், வெப்பத் தாக்கத்தால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர் மிகுந்த கவனமுடன் இருக்கும்படி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்