சிங்கப்பூரின் முதல் நீர் சுத்திகரிப்பு நிலையமான புக்கிட் தீமா நீர் நிலையம், தேசிய முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய மதிப்பைக் கொண்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.
தற்போது பயன்பாட்டில் இல்லாத அந்த நிலையத்தை அடுத்து என்ன செய்யலாம் என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
1891ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட புக்கிட் தீமா நீர் நிலையம், பயன்பாட்டில் இருந்த காலங்களில் பல முறை மேம்படுத்தப்பட்டது.
நிலையத்தின் கீழே செங்கலால் ஆன தூண்களும் வளைவுகளும் உள்ள ஒரு பழைய சுத்திகரிப்பு நீர்த் தொட்டியும் உள்ளது.
பொதுப் பயனீட்டுக் கழகம், நீர்த் தொட்டி இருந்த பகுதியை ஒரு கல்வி மையமாகவும் கண்காட்சிக் கூடமாகவும் மாற்றத் திட்டமிடுவதாக 2020ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த திரு லீ சியன் லூங் கூறியிருந்தார்.
இது குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஓர் ஆய்வை நடத்தியது.
அந்த ஆய்வின்படி, நீர் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த நீர் அருங்காட்சியகமாக மாற்றலாம் என்று அந்த முகவை பரிந்துரைத்தது.
இந்நிலையில்,தேசிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது குறித்து ஆலோசனை வழங்கும் தேசிய மரபுடைமைக் கழகம் புக்கிட் தீமா நீர் நிலையம் குறித்து மேலும் சில ஆய்வுகளை நடத்தவுள்ளது. ஆய்வில் கட்டடங்களின் நிலை குறித்த மதிப்பீடு செய்யப்படவுள்ளது.
“ஆய்வுகள்மூலம் கிடைக்கும் தகவல்கள் இந்த இடத்தின் எதிர்காலப் பயன்பாடுகளைத் தீர்மானிக்க உதவும்,” என்று பொதுப் பயனீட்டுக் கழகமும் தேசிய மரபுடைமைக் கழகமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
புக்கிட் தீமா நீர் நிலையம் கட்டப்பட்டபோது, மெக்ரிட்சி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரைப் பெற்றுச் சுத்திகரித்து, தீவின் மத்தியப் பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்பட்டது. மக்கள் கிணற்று நீரைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்ற புக்கிட் தீமா நீர் நிலையம் உதவியாக இருந்தது.
மேலும், 1957ஆம் ஆண்டு நீரில் புளோரைடு (fluoride) சேர்க்க ரசாயன சுத்திகரிப்பு ஆலை ஒன்று நீர் நிலையத்தில் கட்டப்பட்டது.
பின்னர் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், புக்கிட் தீமா நீர் நிலையம் அவசரத்தேவைக்குச் சேவையாற்றும் நிலையமாக மாற்றப்பட்டது.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ஃபோர்ட் கேனிங் நீர்த் தேக்கத்தில் நீரின் அழுத்தத்தை அதிகரிக்க உதவும் ஒரு நிலையமாகச் செயல்பட்டது.

