தேசியக் கல்விக் கழகத்தின் புதிய இயக்குநராகப் பேராசிரியர் லியு வூன் சியா ஜூலை 1ஆம் தேதி முதல் பொறுப்பேற்பார் என நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஜூன் 25ஆம் தேதி (திங்கட்கிழமை) அறிவித்தது.
தற்போது, தேசிய கல்விக் கழகத்தின் ஆசிரியர் கல்வித் துறைத் தலைவராகப் பேராசிரியர் லியு பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூர் பள்ளிகளில் கற்பித்தலும் கற்றலும் எப்படிச் சிறப்பாகச் செய்யப்படுகிறது என்பதை விளக்கும் முறையை வடிவமைத்த பெருமையும் 57 வயதான பேராசிரியர் லியுவைச் சேரும்.
2001ஆம் ஆண்டு முதல் தேசியக் கல்விக் கழகத்தில் பணியாற்றி வரும் பேராலியு , ஆசிரியர் கல்வி குறித்துப் பல்வேறு அம்சங்களில் கல்வி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
கல்விக்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டுப் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) அவருக்கு வழங்கப்பட்டது.
“இது சேவையாற்ற அழைப்பு என்பதை நான் உணர்ந்ததால், இந்தப் பதவியை ஏற்க நான் முடிவு செய்தேன்,” எனத் தனது புதிய பதவியைப் பற்றி பேராசிரியர் லியு கூறினார்.
2018ஆம் ஆண்டு ஜூலை தொடங்கிக் கடந்த ஆறு ஆண்டுகளாக தேசியக் கல்விக் கழகத்தின் இயக்குநராகப் பேராசிரியர் கிறிஸ்டின் கோ பணியாற்றி வருகிறார்.
அவருடைய பதவியைப் பேராசிரியர் லியு ஏற்கவுள்ளார்.

