சிறுநீரகங்கள் செயலிழக்கும்போது ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ‘ஹீமோடயலிசிஸ்’ சிகிச்சையால் பேரளவுக் கழிவு ஏற்படுகிறது. சிங்கப்பூரின் 9,000க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகளில் மூன்றில் இரு பங்கு பேரைப் பராமரித்துவரும் தேசிய சிறுநீரக அறநிறுவனம், ஆண்டிற்கு 285 டன் அபாயகரமான மருத்துவக் கழிவுகளையும் 940 டன் பொதுக் கழிவுகளையும் உண்டாக்குகிறது.
2030 சிங்கப்பூர் பசுமைத் திட்டத்துக்கு இணங்கும் விதமாக, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் முயற்சிகளில் அறநிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 45 ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களிலுள்ள நீர் சுத்திகரிப்பு அமைப்புகளின் முக்கியப் பாகங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவதற்குப் பதிலாக அவற்றைச் சீரமைத்து, புதுப்பித்து வருகிறது. இதனால் ஐந்து ஆண்டுகளில் $2 மில்லியன் சேமிக்கப்படுகிறது.
இந்த முயற்சிகளின் பலனாக, 2026ல் சிறுநீரக அறநிறுவனத்தின் தலைமையகம் ‘பிசிஏ கிரீன் மார்க் கோல்ட் பிளஸ்’ சான்றிதழைப் பெற்றது.
ஆர்தர் டேயின் குடும்ப நிறுவனமான எஸ்யுடிஎல் அளித்த $4 மில்லியன் நன்கொடையால், கிம் கியட் சாலையில் அறநிறுவனத் தலைமையகத்தில் உள்ள ரத்தச் சுத்திகரிப்பு நிலையத்தில், சிங்கப்பூரின் முதல் மத்திய அமிலச் செறிவு விநியோக முறை அமைக்கப்பட்டது. ஒன் பொங்கோலில் உள்ள மற்றொரு நிலையத்திலும் இந்த வசதி உள்ளது.
அமிலச் செறிவு விநியோக முறை ஒவ்வொன்றுக்கும் $200,000 முதல் $250,000 வரை செலவாகிறது. இந்த வசதியால் ஆண்டுதோறும் 60,000 நெகிழிப் போத்தல்கள் குறைக்கப்பட்டு, கரிம வெளியேற்றமும் 70 விழுக்காடு குறைந்துள்ளதாக அறநிறுவனம் கூறியது.
இதுபோக, கனமான கொள்கலன்களைத் தூக்குவதால் தாதியர்களுக்கு ஏற்படும் முதுகெலும்புப் பாதிப்பு 80 விழுக்காடு குறைந்துள்ளது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் மேலும் நான்கு நிலையங்களுக்கு இந்த வசதியை விரிவுபடுத்த அறநிறுவனம் திட்டமிட்டுள்ளது.

