தேசிய நூலக வாரியத்தின் ‘சாப்டர்ஸ்’ விளையாட்டு: கனவு நூலகத்தை உருவாக்க வாய்ப்பு

தேசிய நூலக வாரியத்தின் ‘சாப்டர்ஸ்’ விளையாட்டு: கனவு நூலகத்தை உருவாக்க வாய்ப்பு

2 mins read
467f2f2e-8e98-4b55-b79e-e34c4a50969c
விளையாட்டாளர்கள், தேசிய நூலக வாரியத் திட்டங்கள், இடங்கள், முயற்சிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அழகிய நூலகங்களை உருவாக்கவேண்டும். - படங்கள்: தேசிய நூலக வாரியம்

பொதுமக்கள் தேசிய நூலக வாரியம் தயாரித்த சிறப்புப் பதிப்பு விளையாட்டு அட்டைகளை இப்போது பெற்றுக்கொள்ளலாம்.

‘சாப்டர்ஸ்’ எனப்படும் அந்த இலவச விளையாட்டு அட்டைகளைப் பெற்றுக்கொள்ள, பயனீட்டாளர்கள் தங்கள் கைப்பேசிகளில் தேசிய நூலக வாரியத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து, நூலக உறுப்பினர்களாகப் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.

சிங்கப்பூரர்களுக்கு உறுப்பினர் பதிவு இலவசம். நிரந்தரவாசிகள் $10.69 செலுத்தவேண்டும்.

மத்திய நூலகத்தில் அந்த விளையாட்டு அட்டைகள் கடந்த மார்ச் 7, 8ஆம் தேதிகளில் வழங்கப்பட்டன. இதுவரை, 800 விளையாட்டுப் பதிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மார்ச் 14, 15, ஏப்ரல் 11, 12 என மேலும் இரண்டு வார இறுதிகளில், காலை பத்து மணி முதல் மாலை 6 மணிவரை அந்த விளையாட்டு அட்டைகள் கொடுக்கப்படும்.

தேசிய நூலக வாரியத்தின் கைப்பேசிச் செயலி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அந்த விளையாட்டு அட்டைகள் வழங்கப்படுகின்றன. செயலி மூலம், பயனீட்டாளர்கள் மின் புத்தகங்களை இரவல் பெறலாம்; மின்னிலக்க வளங்களை நாடலாம்.

சென்ற 2025ஆம் ஆண்டு, தேசிய நூலக வாரியத்தின் 30ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அந்த விளையாட்டு அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இந்த விளையாட்டு முக்கியமாக இளைஞர்களைக் (young adults) கவர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களை நூலகங்களுக்கு ஈர்க்க வேண்டும் என்பதே தேசிய நூலக வாரியத்தின் நோக்கமாகும். அதோடு, அது, குடும்பங்களையும் எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குழந்தைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘சாப்டர்ஸ்’ விளையாட்டு, பலகை விளையாட்டுகளில் விருப்பம் உள்ள வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தேசிய நூலக வாரியத்தின் ஒன்பது ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது.

‘சாப்டர்ஸ்’ விளையாட்டில், கடந்த முப்பது ஆண்டுகளாக தேசிய நூலக வாரியத்தின் திட்டங்கள், இடங்கள், முயற்சிகளைப் பிரதிநிதிக்கும் அட்டைகளைச் சேகரித்து மிக அழகான நூலகத்தை உருவாக்கவேண்டும். அதில் இரண்டு முதல் நான்கு விளையாட்டாளர்கள் வரை விளையாடலாம்.

குறிப்புச் சொற்கள்