தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய மனநல உதவி அழைப்பு எண் தொடக்கம்

2 mins read
307cbd75-423f-4134-bed4-b66d72e59ee5
#05-11/12. 9 தெம்பனிஸ் கிராண்ட பகுதியில் உள்ள ‘நே‌ஷனல் மைன்ட்லைன் 1771’ அலுவலகம். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

மனநல உதவி தேவைப்படுவோருக்கு 24 மணிநேரமும் உதவி வழங்க வழி பிறந்துள்ளது.

மனநல உதவி நாடுவோருக்கென தேசிய அழைப்பு எண் புதன்கிழமை (ஜூன் 18) தொடங்கப்பட்டது. இச்சேவை மூலம் குறுந்தகவல் வழியாகவும் உதவி நாடலாம்.

தினமும் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கும் இந்தச் சேவை ‘நே‌ஷனல் மைன்ட்லைன் 1771’ (national mindline 1771) என்று அழைக்கப்படுகிறது. மனநலனை முக்கியமாகக் கருதவைக்க சிங்கப்பூர் எடுத்துவரும் முயற்சிகளில் இந்நடவடிக்கை அடங்கும்.

தேசிய மனநலன், நலன் உத்தியின்கீழ் (National Mental Health and Well-Being Strategy) முன்வைக்கப்பட்டுள்ள முக்கியப் பரிந்துரைகளில் புதிய மனநல அழைப்பு எண்ணும் அடங்கும்.

மனநல உதவி தேவைப்படுவோர் 1771 என்ற எண்ணை அழைத்து பயிற்சிபெற்ற மனநல ஆலோசகரிடம் பேசலாம் அல்லது +6566691771 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செயலிவழி தொடர்புகொள்ளலாம். https://mindline.sg/fsmh எனும் இணைய முகவரி மூலம் இணையத்திலும் தொடர்புகொள்ளலாம்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் எல்லா உரையாடல்களும் தொடர்புகளும் ரகசியமாக வைக்கப்படும். அடையாளத்தை வெளியிட விரும்பாத உதவி நாடுவோர் அவ்வாறே செய்யலாம். அந்த வகையில், மனநல ஆதரவு தேவைப்படுவோர் முதல் அடியை எடுத்துவைப்பது எளிதாகிறது.

புதிய மனநல உதவிச் சேவையை மனநலக் கழகம் நடத்துகிறது. இதில் 30 முழுநேர மனநல ஆலோசகர்கள் சேவை வழங்குவர். அவர்கள் உளவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றவர்கள்.

இச்சேவை சிங்கப்பூரின் நான்கு தேசிய மொழிகளிலும் வழங்கப்படும். தெம்பனிஸ் வட்டாரத்தில் ‘நே‌ஷனல் மைன்ட்லைன் 1771’ அலுவலகத்தில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் புதிய மனநல உதவிச் சேவையை புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

மன உளைச்சல் அதிகமாகும்போது சிங்கப்பூரர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தேசிய அளவிலான நேரடித் தொடர்பு எண் தேவை என்பது கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது நாம் கற்றுக்கொண்ட முக்கியப் பாடங்களில் ஒன்று என டாக்டர் கோ, செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். அமைதியான காலத்தில் இத்தகைய சேவையைத் தொடங்குவது, பெரிய நெருக்கடிகள் ஏற்படும்போது அதை விரிவுபடுத்த அரசாங்கத்துக்கு வகைசெய்யும்.

“தேசிய அளவில் பெரிய நெருக்கடி ஏற்பட்டால் உதவி நாடுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும்போது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்குப் புதிய அழைப்பு எண் அடித்தளமாக அமையும். சம்பந்தப்பட்ட சேவைகள் வழங்கப்படுவதுடன், பல்வேறு அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த உளவியல் முதலுதவி தொடர்பில் பயிற்சி பெற்றுள்ளோரை ஒன்றுகூட்டி கூடுதல் உதவி வழங்கி அவ்வாறு செய்ய முடியும்,” என்றார் டாக்டர் கோ.

இச்சேவை, சவாலான வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கையாள்வோர், மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்கு மனநல ஆலோசனை வழங்குவதுடன் சமூக அளவில் இருக்கும் மனநலச் சேவைகள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவரவருக்குத் தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்க உதவுவதும் நோக்கமாகும்.

குறிப்புச் சொற்கள்