மின்னிலக்கக் காலத்தில் மாறிவரும் வாசிப்புப் பழக்கங்களுக்கு இடையே, சிங்கப்பூரர்களிடையே ஆழமான, தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்காக ‘ரீட் எஸ்ஜி’ (ReadSG) என்ற ஐந்தாண்டு தேசிய வாசிப்பு இயக்கத்தை தேசிய நூலக வாரியம் தொடங்கவுள்ளது.
வரும் செப்டம்பரில் அத்திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கும் என்று தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெலிசா டாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
இயக்கத்தின் புரவலராக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பொறுப்பேற்கிறார்.
வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுத்து, அதனை வழக்கமாக்குவதை இயக்கம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
‘நாளும் 15 நிமிடங்கள்’ வாசித்தல் எனும் அழைப்புடன், வாசிப்பு இயக்கத்தின் வாயிலாகக் குறைந்தது 150,000 சிங்கப்பூரர்களை வாசிப்புப் பழக்கத்தை நோக்கிய முதல் அடியை எடுத்து வைக்கச் செய்ய வேண்டும் என்பது வாரியத்தின் இலக்கு.
உடலுக்குப் பயிற்சிபோல் மூளைக்கு வாசிப்பு
மின்னிலக்க ஊடகங்களின் வருகையால் குறுகியகால உள்ளடக்கங்களை மேலோட்டமாகப் படிக்கும் போக்கு உலகளவில் அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் வாரியத்தின் தேசிய வாசிப்புப் பழக்கவழக்கங்கள் ஆய்வின்படி, 89 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் வாரத்திற்கு ஒருமுறை ஏதேனும் வாசிக்கிறார்கள் என்றாலும், 28 விழுக்காட்டினர் மட்டுமே புத்தகங்களை வாசிக்கின்றனர் என்பது தெரியவந்தது.
உடற்பயிற்சி எவ்வாறு உடலை வலுவாக்குகிறதோ, அதேபோலத் தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் ஒருவரின் கவனத்தைக் கூர்மைப்படுத்தி, அறிவாற்றலையும் மனநலத்தையும் மேம்படுத்துகிறது. அவ்வகையில், சிங்கப்பூரர்களிடையே வழக்கமான வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க இந்தப் புதிய திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வாரியம் கூறியது.
அதேபோல, இந்தப் புதிய திட்டத்தின்மூலம் வாசிப்பாளர்கள் ‘மெய்நிகர் நாணயங்களை’ ஈட்டி, பின்னர் அவற்றை ரொக்கப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.
தேசிய வாசிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கருத்துச் சேகரிப்பு எனும்’ அரசின் கூட்டுப் பங்களிப்புத் தளத்தில் பதிவு செய்யுமாறும், அத்தளத்தில் பொதுமக்கள் தங்களின் அன்றாட வாசிப்பு நேரத்தைப் பதிவு செய்து மெய்நிகர் நாணயங்களைச் சேகரிக்கலாம் என்றும் வாரியம் தெரிவித்தது.
‘கவ்டெக்’ அமைப்பால் நிர்வகிக்கப்படும் அத்தளத்தில் 1,000 நாணயங்களை $1 ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும். வெகுமதிகள் குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் இறுதிசெய்யப்படும் என்று வாரியம் தெரிவித்தது.
“ரீட் எஸ்ஜி இயக்கத்தின்மூலம் சிங்கப்பூரர்கள் வாசிப்பை ஒரு மகிழ்ச்சியான வாழ்நாள் பழக்கமாக ஏற்றுக்கொள்வர் என நம்புகிறோம்,’’ என்றார் திருவாட்டி மெலிசா டாம்.
“இதற்கு முந்தைய வாசிப்பு இயக்கங்களும் மக்களை வாசிக்க ஊக்குவித்தன. ஆனால் இம்முறை, வாசிப்பை ஒரு தொடர்ச்சியான பழக்கமாக மாற்ற ஊக்குவிப்பதே இதன் சிறப்பம்சம்.
“தேசிய வாசிப்புப் பண்பாட்டை உருவாக்குவது தேசிய நூலக வாரியத்தால் மட்டுமே சாத்தியமாகிவிடாது. அதற்கு நாடு தழுவிய கூட்டுமுயற்சி தேவை,’’ என்றார் அவர்.
அடுத்த ஐந்தாண்டுகளில் பல்வேறு அரசு அமைப்புகள், சமூகம், தனியார் பங்காளிகளுடன் இணைந்து வாரியம் இத்திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளது.
இனி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாகக் கொண்டாடப்படும்.

