தேசிய ஆய்வு அறநிறுவனமும், ஏ*ஸ்டார் அமைப்பும் இவ்வாண்டு புதிய தலைமை நிர்வாகிகளைப் பெறவிருக்கின்றன.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திரு ஜான் லிம் ஹுவா எர்ன் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி (நியமனம்) பொறுப்பையும், பொதுத்துறை அமைப்பான அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை மற்றும் திட்ட அலுவலகத்தின் தலைவர் (நியமனம்) பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார் என்று தேசிய ஆய்வு அறநிறுவனம் ஆகஸ்ட் 29ஆம் தேதி அறிவித்தது.
அக்டோபர் 1ஆம் தேதி திரு லிம், தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பையும், பொதுத்துறை அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை மற்றும் திட்ட அலுவலகத்தின் தலைவர் பொறுப்பையும் முழுமையாக ஏற்றுக்கொள்வார். அதே நாளில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சில் அவர் வகித்த துணைச் செயலாளர் (வாய்ப்பு, மீள்தன்மை) பொறுப்பை திரு லிம் கைவிடுவார்.
தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ள திரு பே கியன் தியேக், அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஏ*ஸ்டார் எனும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் தலைமை நிர்வாகி (நியமனம்) பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று வர்த்தக தொழில் அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
தற்போது ஏ*ஸ்டார் அமைப்பின் தலைமை நிர்வாகியாக உள்ள திரு ஃபிரேடெரிக் சியூவிடமிருந்து நவம்பர் 8ஆம் தேதி திரு பே, அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அக்டோபர் 1ஆம் தேதி திரு சியூ, அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை மற்றும் திட்ட அலுவலகத்தின் தலைவர் பொறுப்பையும் கைவிடுவார்.
“இது குறித்து கருத்துரைத்த தேசிய ஆய்வு அறநிறுவனம், அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை மற்றும் திட்ட அலுவலகம் ஆகியவற்றின் நிரந்தரச் செயலாளர் பேராசிரியர் டான் சோர் சுவான், “பல தலைமைத்துவப் பங்களிப்புகளை வழங்கிய கியன் தியேக், ஃபிரேடெரிக் இருவருக்கும் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.