சிங்கப்பூரில் ஐந்தில் ஒரு குழந்தை தோல் அழற்சி நோயால் பாதிக்கப்படுகிறது, பெரியவர்களில் 10ல் ஒருவர் பாதிக்கப்படுகிறார்.
தோல் அழற்சி ஏற்படுபவர் களுக்கு தோலில் தொடர் அரிப்பு ஏற்படும்.
‘எக்சிமா’ என்று அழைக்கப் படும் இந்த தோல் அழற்சி நாள்பட்ட நோயாகும். இது தோலில் வீக்கம், சிவத்தல், எரிச்சல் ஆகியவற்றை உண்டாக்கும்.
இந்த நோய் ஆசியர்கள் இடையே அதிகமாக இருப்பதால் அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் தோல் அழற்சி சிகிச்சைக்கு புதிய வழிகளை கண்டுபிடிப்பதிலும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ‘எக்சிமா’ நோய் குறித்து ஆராய கிட்டத்தட்ட 10 மில்லியன் வெள்ளி நிதியுதவி யைப் பெற்றுள்ளது தேசிய தோல் ஆராய்ச்சி நிலையம்.
நிதியுதவி மே மாதம் கிடைத்தது என்றும் ‘பெரும் கூட்டு முயற்சி திறந்த நிதி’ திட்டத்தின் கீழ் தோல் தொடர்பாக தேசிய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் வழங்கும் முதல் நிதியுதவி என்றும் நிலையம் தெரிவித்தது.
10 மில்லியன் வெள்ளி நிதி யுதவி நான்கு ஆண்டு ஆராய்ச்சிக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘எக்சிமா’ நோய் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும், குறிப்பாக குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களை எளிதாக பாதிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தோலின் தடுப்பு செயல்பாட்டில் குறைபாடு இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது, மரபணு, சுற்றுச்சூழல், குடலில் உள்ள நுண்ணுயிர்கள், மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் தோல் அழற்சி ஏற்படுகிறது.
இந்த நோய் உள்ளவர் களுக்கு மூச்சு இரைப்பு, உணவு அழற்சியால் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.
தேசிய தோல் ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு மட்டும் புதிதாக ‘எக்சிமா’ நோயால் பாதிக்கப்பட்ட 14,000க்கும் அதிகமான நபர்களுக்கு சிகிச்சை வழங்கியது.
தற்போதைய நிலவரப்படி மரபணு ரீதியாக ‘எக்சிமா’ நோய் ஏற்படுவது 20 முதல் 30 விழுக்காடுதான் என்று ஆராய்ச்சிகள் கூறுவதாக தேசிய தோல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.

