புதிய கட்டடத்தில் தேசிய தோல் சிகிச்சை நிலையம்

புதிய கட்டடத்தில் தேசிய தோல் சிகிச்சை நிலையம்

2 mins read
31d86314-122e-4652-bba8-ca4f838b8abb
நொவீனாவின் மாண்டலே சாலையில் தேசிய தோல் சிகிச்சை நிலையத்தின் புதிய கட்டடம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

தேசிய தோல் சிகிச்சை நிலையம் நொவீனாவின் மாண்டலே சாலையில் புதன்கிழமை (அக். 25) அதன் புதிய கட்டடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது. பழைய கட்டடத்தைவிட இது ஒரு மடங்கு பெரியது எனக் கூறப்பட்டது.

2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் கூடுதலாக 30 விழுக்காட்டு நோயாளிகளைப் புதிய கட்டடம் கையாளும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

2040ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 50 விழுக்காட்டு நோயாளிகள் அங்கு சிகிச்சை பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டு, நிலையத்தின் புறநோயாளி பிரிவில் கிட்டத்தட்ட 280,000 பேர் சிகிச்சை பெற்றனர்.

“மக்கள்தொகை வேகமாக மூப்படையும் நிலையில், நீண்டநாள் தோல் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். முதிய நோயாளிகளுக்கு மேம்பட்ட கவனிப்பு தேவைப்படும்,” என தேசிய தோல் சிகிச்சை நிலையத்தின் இயக்குநரான பேராசிரியர் டான் சுவாட் ஹூன் கூறினார். புதிய கட்டடத் திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கையில், வாழ்நாளில் அவர்கள் சூரிய ஒளியில் செல்லும் நேரம் அதிகரிக்கிறது. அதனால் மூத்தோர் அதிக எண்ணிக்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்றார் திருவாட்டி டான்.

நிலையம், கடந்த சில மாதங்களாக கட்டங்கட்டமாக அதன் புதிய கட்டடத்துக்கு மாறியது.

“கடந்த சில மாதங்களில், தேசிய தோல் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக முன்பதிவு செய்ய நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது. முன்னர் 60 நாள்களாக இருந்த அது தற்போது 50 நாள்களுக்குக்கீழ் குறைந்துள்ளது. இருப்பினும் நிலையத்தின் செயல்பாடுகள் நிலையாகும்வரை இதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்,”என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய கட்டடத்தில் இருக்கும் பல்வேறு வசதிகள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூத்தோருக்குச் சிறப்பான பராமரிப்பு வழங்க உதவும் எனக் கூறப்பட்டது.

இந்தப் புதிய கட்டடத்தில் பத்து மாடிகள் உள்ளன எனவும் 69 ஆலோசனை அறைகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் முதல் இந்தக் கட்டடம் செயல்படுகிறது.

குறிப்புச் சொற்கள்