சிங்கப்பூரில், புதிதாகத் தேசிய விண்வெளி அமைப்பு ஒன்று அமைக்கப்படவிருப்பதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங் அறிவித்துள்ளார்.
விண்வெளி பொருளியலை விரிவுபடுத்தி, விண்வெளித் திறன்களை உருவாக்க உதவும் அந்த அமைப்பு, ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் காணும் என்றார் அவர்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 2) முதன்முறையாக நடைபெற்ற விண்வெளி மாநாட்டில் டாக்டர் டான் உரையாற்றினார்.
துணைக்கோளப் பணிகளை மேற்கொள்ளவும் குறிப்பிட்ட இடத்தின் துணைக்கோளப் படத்துடன் அதுகுறித்த தரவுகளையும் ஆய்வுகளையும் அரசாங்கத்துக்குப் பெற்றுத்தரவும் புதிய தேசிய விண்வெளி அமைப்பு, பல அமைப்புகள் கொண்ட செயல்பாட்டு நிலையத்தைக் கொண்டிருக்கும் என்றார் அவர்.
துறைமுக நிர்வாகம், நகர சீரமைப்புக்குத் திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய அம்சங்களுக்கு அமைப்பு உதவும் என்றார் மனிதவள அமைச்சருமான டாக்டர் டான்.
பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சிக்கு இடையே பிப்ரவரி 2, 3 ஆகிய நாள்களில் விண்வெளி மாநாடு இடம்பெறுகிறது.
தேசிய அளவிலான தேவைகளைப் பூர்த்திசெய்ய துணைக்கோளத் தொகுதிகளை மேம்படுத்துவதில் சிங்கப்பூர் கவனம் செலுத்தும் என்ற டாக்டர் டான், வட்டார அளவில் இன்னும் கூடுதலாகச் செயல்பட பூமியில் சிங்கப்பூர் அமைந்துள்ள இடம் நல்ல வாய்ப்பைத் தருகிறது என்றார்.
தற்போது, சிங்கப்பூர் அரசாங்கம் பூமியை ஆராயும் மூன்று துணைக்கோளங்களுக்கு இணை உரிமையாளராக உள்ளது. அவை எஸ்டி என்ஜினியரிங் (ST Engineering) குழுமத்தால் உள்நாட்டுத் தொழில்நுட்பம், தற்காப்பு, பொறியியல் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
புதிய விண்வெளி அமைப்பு, விண்வெளி தொடர்பான தேசிய சட்டங்களையும் விதிமுறைகளை உருவாக்கும் பொறுப்பையும் ஏற்கும். புத்தாக்கத்தையும் வர்த்தத்தையும் முன்னிறுத்தி விண்வெளிப் பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான உயர் தரத்தைக் கட்டிக்காப்பதிலும் அமைப்பு கவனம் செலுத்தும் என்று டாக்டர் விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூர் அரசாங்கம், 2022ஆம் ஆண்டிலிருந்து விண்வெளி ஆராய்ச்சி, வடிவமைப்புத் திட்டங்களுக்கென $200 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.

