‘உயிர்மாய்ப்புகளைத் தடுக்க தேசிய அளவிலான முயற்சி தேவை’

2 mins read
d9a7bc4b-d66b-415e-afe1-ab649a431027
வெள்ளை அறிக்கை முன்வைத்துள்ள பரிந்துரைகளில் உயிர்மாய்ப்புத் தடுப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கும் தேசிய அலுவலகமும் ஒன்று. சீரான இடைவெளியில் தரவுகளை வெளியிடும் கண்காணிப்பு முறை, உயிர்மாய்ப்புத் தடுப்பு தொடர்பாக தேசிய அளவில் நடத்தப்படும் பொதுமக்கள் விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றையும் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உயிர்மாய்ப்புகளைத் தடுக்க தேசிய அளவிலான, ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று சிங்கப்பூர் மனநலப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்குத் தேவையான தேசிய அளவிலான உயிர்மாய்ப்புத் தடுப்பு உத்திகளை மேற்கோள் காட்டும் 160 பக்க அறிக்கையை அந்தப் பணிக்குழு வெளியிட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை முன்வைத்துள்ள பரிந்துரைகளில் உயிர்மாய்ப்புத் தடுப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கும் தேசிய அலுவலகமும் ஒன்று.

சீரான இடைவெளியில் தரவுகளை வெளியிடும் கண்காணிப்பு முறை, உயிர்மாய்ப்புத் தடுப்பு தொடர்பாக தேசிய அளவில் நடத்தப்படும் பொதுமக்கள் விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றையும் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பான வெள்ளை அறிக்கையை செப்டம்பர் 10ஆம் தேதியன்று சமூகத்தை மையமாகக் கொண்ட எஸ்ஜி மென்டல் ஹெல்த் மேட்டர்ஸ் குழு வெளியிட்டது.

இக்குழுவுக்கு முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியா ஓங் தலைமை தாங்குகிறார்.

பணிக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் இம்மாத இறுதியில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கைக்கு ‘புரோஜெக்ட் ஹயாட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘ஹயாட்’ என்றால் மலாய் மொழியில் உயிர் என்று பொருள்.

அறிக்கை மூலம் பணிக்குழு 23 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இதுவே உயிர்மாய்ப்புத் தடுப்பு தொடர்பாக சிங்கப்பூரில் நடத்தப்பட்டுள்ள முதல் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்மாய்ப்புத் தடுப்பில் அரசாங்கமும் சமூக அமைப்புகளும் முன்னேற்றம் கண்டிருப்பதாக திருவாட்டி ஓங் தெரிவித்தார்.

ஆனால் உயிர்மாய்ப்புத் தாக்குதலுக்குத் தேவையான ஒருங்கிணைந்த கட்டமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார் அவர்.

அனைத்துத் உயிர்மாய்ப்புகளுக்கும் மனநோய் காரணம் என்று கூறிவிட முடியாது என்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சாத்தியம் உள்ளது என்று சொல்லிவிட முடியாது என்றும் திருவாட்டி ஓங் தெரிவித்தார்.

“தேசிய அளவிலான உத்திமுறை, கட்டமைப்பு இல்லாவிடில் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ எவையெல்லாம் பங்களித்தன என்பதைத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை,” என்று திருவாட்டி ஓங் கூறினார்.

2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 322 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டைவிட இது 32.4 விழுக்காடு குறைவு.

2022ஆம் ஆண்டில் 476 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

இதற்கிடையே, உயிர்மாய்ப்புத் தடுப்பு ஆதரவுச் சேவைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினருக்கு மட்டுமே தெரிந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு ‘புரோஜெக்ட் ஹயாட்’டின் ஒரு பகுதியாகும்.

குறிப்புச் சொற்கள்