சிங்கப்பூர் விளையாட்டுக் கல்விக் கழகம் (SSI), தேசிய இளையர் விளையாட்டுக் கழகம் (NYSI), சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி (SSP) ஆகியவற்றை இணைத்து, தேசிய திடல்தட வீரர்களுக்கான புதிய நிலையம் அமைக்கப்படவிருக்கிறது.
தேசிய விளையாட்டாளர்களில் இளையர் முதல் முதியோர் வரை மேலும் ஒருங்கிணைந்த பயிற்சியை ஒரே இடத்தில் பெற இது வழிவகுக்கும்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், தமது அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திங்கட்கிழமை (மார்ச் 10) நாடாளுமன்றத்தில் புதிய நிலையம் குறித்து அறிவித்தார்.
முதற்கட்டமாக, ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் விளையாட்டுக் கல்விக் கழகமும் தேசிய இளையர் விளையாட்டுக் கழகமும் இணைந்து புதிய விளையாட்டுக் கல்விக் கழகமாகச் செயல்படும்.
தற்போது சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் அமைந்திருக்கும் ‘எஸ்எஸ்ஐ’ 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் உட்லண்ட்ஸ் வளாகத்திலும் காலாங்கிலும் அமைந்துள்ள ‘என்ஒய்எஸ்ஐ’ 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இரு கல்விக் கழகங்களும் இணைக்கப்பட்ட பிறகு, சில ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியும் அவற்றுடன் இணைக்கப்படும்.
இந்தப் புதிய ஒருங்கிணைந்த தேசியப் பயிற்சி நிலையம், ‘காலாங் அலைவ்’ பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் எனக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பெருந்திட்டம், காலாங் வட்டாரத்தை விளையாட்டுக்கான மாவட்டமாகப் புதுமெருகூட்ட அரசாங்கம் வகுத்துள்ள விரிவான உத்தியாகும்.
விளையாட்டாளர்களுக்கான மூன்று கல்வி நிலையங்களையும் ஒருங்கிணைப்பதால் பல்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு வகையில் நன்மை கிட்டும் என்றார் அமைச்சர் டோங்.
புதிய நிலையம், திடல்தட வீரர்களின் விளையாட்டுத்துறைப் பயணத்தில் தடையற்ற, விரிவான ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விளையாட்டாளர்கள் இளமைப் பருவத்திலிருந்து முதுமைக்கு மாறும் கட்டத்திலும் அவர்கள் வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் அது ஆதரவு வழங்கும்.
விளையாட்டுத் துறையில் காலடி எடுத்துவைத்துள்ள இளம் விளையாட்டாளர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அது நல்லதொரு வாழ்க்கைத் தொழிலாக விளங்கக்கூடும் என உறுதியளித்து, போட்டித்தன்மை மிக்க இத்துறையில் நீண்டகாலம் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கிறது.