தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் செரிமான நல நிலையம் திறப்பு

2 mins read
7c4e33d4-1f79-44fc-a39c-34577d9b4420
தேசியப் பல்கலைக்கழக செரிமான நல நிலையத் திறப்புவிழாவில் சுகாதார அமைச்சின் சுகாதாரத் தலைமை இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக் (நடுவில்) கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இரைப்பை குடல் சார்ந்த நோய்கள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை (என்யுஎச்) தேசியப் பல்கலைக்கழக செரிமான நல நிலையத்தைத் (என்யுசிடி) அதிகாரத்துவமாகத் திறந்துள்ளது.

இரைப்பை குடல் புற்றுநோய், குடல் நோய் அழற்சி, கல்லீரல் நலம் உள்ளிட்டவற்றில் அந்நிலையம் கவனம் செலுத்தும்.

சிங்கப்பூர்ப் புற்றுநோய்ப் பதிவேட்டின்படி, புற்றுநோயாளிகளில் 31 விழுக்காட்டு ஆண்களிடமும் 18 விழுக்காட்டுப் பெண்களிடமும் இத்தகைய பாதிப்புகள் உள்ளன.

சிங்கப்பூரில் பெருங்குடல் மலக்குடல் புற்றுநோயே அதிகம் பாதிக்கும் புற்றுநோய் வகையாகும். ஆண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் அதற்கு நாலாமிடம் என்று நிலையத்தின் இணைப் பேராசிரியர் லீ குவான் ஹுவெய் தெரிவித்தார்.

கொழுப்பு படிந்த கல்லீரல் சார்ந்த வளர்சிதை மாற்றச் செயல்பிறழ்வும் (metabolic dysfunction) சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது. உடற்பருமன், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சினைகளுடன் அது தொடர்புபடுத்தப்படுகிறது.

“சிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில், சிங்கப்பூரின் இடைநிலை வயது 50 ஆண்டுகளை எட்டும். அப்போது, பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்,” என்று பேராசிரியர் லீ குறிப்பிட்டார்.

இத்தகைய சூழலில், செரிமான நல நிலையத்தின்மூலம் என்யுஎச் தனது செரிமானநல வளங்களை ஒரே கூரையின்கீழ் தொகுத்து, நோயாளிப் பராமரிப்பை மேம்படுத்துவதிலும் புதிய நோயறிகருவிகளையும் (detection tool) சிகிச்சை முறைகளையும் கண்டறிவதிலும் கவனம் செலுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

சுகாதார அமைச்சின் சுகாதாரத் தலைமை இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) செரிமான நல நிலையத்தை அதிகாரத்துவமாகத் திறந்துவைத்தார்.

கடந்த 2024 ஏப்ரலில் அந்நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து, நோயாளிகளின் வீட்டிலேயே நரம்பு வழியாக அவர்களுக்கு மருந்தைச் செலுத்துவது அதன் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்