சிங்கப்பூரில் ஊதியம், வேலை வாய்ப்புப் பிரச்சினைகள் குறித்த தனது வருடாந்தர வழிகாட்டுதல்களை உருவாக்க தேசிய சம்பள மன்றம் பொதுமக்களின் கருத்துகளை நாடுகிறது.
சிங்கப்பூர் பொருளியல் போட்டித்தன்மை, ஊழியர் சந்தை நிலவரம், பணவீக்கம், உற்பத்தித்திறன் வளர்ச்சி, உலகளாவிய பொருளியல் நிலவரம் ஆகியவற்றை மன்றம் கலந்துரையாடல்களில் கவனத்தில் கொள்ளும்.
குறைந்த வருமான ஊழியர்களுக்கான படிப்படியான சம்பள உயர்வின் வரம்பு குறித்த தனது வருடாந்தர வழிகாட்டுதலையும் இது தொடர்ந்து வழங்கும்.
தேசிய சம்பள மன்றம் முன்வைக்க உள்ள வருடாந்தர வழிகாட்டுதல்கள் குறித்து தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க ஆர்வமுள்ளோர் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் go.gov.sg/nwc25-26 என்ற தளத்தில் பதிவிடலாம்.
அரசாங்கம், முதலாளிகள், ஊழியர்களின் பிரதிநிதிகள் அடங்கிய தேசிய சம்பள மன்றம் செப்டம்பர் 1 அன்று கூடும்.
இந்த வழிகாட்டுதல்கள் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 30 வரையிலான காலத்தை உள்ளடக்கி நவம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் தணிந்ததையடுத்து 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உண்மையான சம்பளம் அதிகரித்தபோதும், தற்போது நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற சூழல் காரணமாக 2025ஆம் ஆண்டில் அது மெதுவடையக்கூடும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
2023ஆம் ஆண்டிலிருந்து தளர்ந்த பணவீக்கத்தைக் கருத்தில்கொண்ட பின்னர், உண்மையான ஊதியம் 2024ல் 3.2 விழுக்காடு அதிகரித்தது. இது 2023ல் 0.4 விழுக்காடாக இருந்தது என்று மே 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட வருடாந்தர ஊதிய நடைமுறைகள் அறிக்கையில் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. டிபிஎஸ் வங்கியின் தலைவரான பீட்டர் சியா தலைமையிலான 37 உறுப்பினர்கள் தேசிய சம்பள மன்றத்தில் செயல்படுகின்றனர்.