அனைவர்க்கும் வணக்கம்.
தமிழ் முரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை வண்ணமிகு தொகுப்பாக ராஜா வழங்கியுள்ளார்.
மிகச் சில செய்தித்தாள்களே 90 ஆண்டுகாலம் நீடித்திருக்கின்றன. உலகின் ஆகப் பழைமையான தமிழ்ச் செய்தித்தாள்களில் தமிழ் முரசும் ஒன்று.
காலனித்துவ ஆட்சியைக் கடந்தீர்கள். ஜப்பானியப் படையெடுப்பின்போது தற்காலிகமாக நாளிதழ் வெளியீட்டை நிறுத்தவேண்டியிருந்தது. உங்கள் பயணம், சுதந்திரத்தை நோக்கிய சிங்கப்பூரின் பயணத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
உண்மையில், தமிழ் முரசு அரிதான ஒன்றாகத் திகழ இன்னொரு காரணமும் உள்ளது. இந்தியா, இலங்கை, மலேசியா தவிர்த்து, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் - 200,000க்கும் அதிகமாக - தமிழர்கள் வசிக்கும் வேறு எந்த நாட்டிலும் தமிழ் நாளிதழ் அச்சிடப்பட்டு வெளியாவதில்லை.
புவியியல் சார்ந்த காரணங்களால் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நேரடி விநியோகம் சாத்தியப்படாமல் இருக்கலாம்.
அல்லது, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைப் போல, வேறு நாடுகளில் தற்காலிகமாக வசிக்கும் தமிழ்ச் சமூகத்தினர் தமிழ் நாளிதழுக்கான தேவையை அவ்வளவு தீவிரமாக உணராதிருக்கலாம்.
அண்டை நாடான மலேசியாவில் இரு தமிழ்ச் செய்தித்தாள்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஆனால், இங்குள்ளதைப் போல பத்து மடங்கு, அதாவது ஏறத்தாழ இரண்டு மில்லியன் தமிழர்கள் அங்குள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டைக் கட்டியெழுப்பியதில் தமிழ் முரசுக்கு முக்கியப் பங்கு
வரலாற்றின் முதல் வரைவுகளை எழுதி வருகிறது செய்தித்துறை.
நிகழ்வுகளை மட்டும் தமிழ் முரசு போன்ற செய்தித்தாள்கள் ஆவணப்படுத்துவதில்லை.
தொடக்க நிலையிலான, சில நேரங்களில் துல்லியமற்ற வரலாற்று ஆவணங்களை அவை வழங்குகின்றன. பின்னர் அவை பெரும்பாலும் வரலாற்று ஆய்வாளர்களால் பண்படுத்தப்படுகின்றன.
ஆனால், நீங்கள் சிங்கப்பூரின் முக்கிய மைல்கற்களை மட்டும் ஆவணப்படுத்தவில்லை.
தமிழ்ச் சமூகத்தின் பார்வைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்குத் தளம் அமைத்துத் தந்துள்ளீர்கள்.
தாக்கத்தை ஏற்படுத்தி, வளர்ச்சியை வடிமைத்துள்ளீர்கள்.
இந்த எஸ்ஜி60 ஆண்டில், நாட்டைக் கட்டியெழுப்பியதில் உங்களது பணியை அங்கீகரிக்க விரும்புகிறேன்.
1960களில் கம்பங்களிலிருந்து பொதுக் குடியிருப்புகளுக்குச் சிங்கப்பூர் மாறத் தொடங்கியதைச் சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். கம்பங்களில் வசித்த இந்தியக் குடும்பங்களில் பல, தங்கள் பண்பாட்டு, சமயத் தொடர்புகளை இழந்து விடுவோமோ எனக் கவலைப்பட்டன. கோவில்களையும் திருத்தலங்களையும் மையமாகக் கொண்டு, அணுக்க சமூகமாகத் திகழ்ந்த கம்பத்து வாழ்க்கைக்கு அவர்கள் பழகியிருந்தனர்.
அதுதொடர்பான செய்திகளை எழுதியபோது, அத்தகைய சூழலை விட்டுப் பிரிவதில் சிலர் உணர்ந்த பேரிழப்பைத் தமிழ் முரசும் ஒப்புக்கொண்டது.
அதே நேரத்தில், சிறந்த வாழ்க்கைத்தரம், நவீன உள்கட்டமைப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழக நகரங்களில் வேர்விட்ட, பகிரப்பட்ட தேசிய அடையாளம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, எதிர்காலம் குறித்த பார்வையையும் அது முன்வைத்தது.
இந்தியச் சமூகத்தினர் பொதுக் குடியிருப்பை இடப்பெயர்வாகவும் இழப்பாகவும் உணராமல், சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்திலும் முன்னேற்றத்திலும் துடிப்பான பங்கேற்பாக அதனைக் கருதும்படி தமிழ் முரசின் தலையங்கங்களும் செய்திகளும் உதவின.
அதுபோல, நாட்டைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் இருமொழிக் கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்தியச் சமூகத்தில் தமிழர்கள் அதிகமாக இருந்ததால் தமிழ், தாய்மொழிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
உலகப் பொருளியலில் ஒருங்கிணைந்து வளர்ச்சி வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளவும், நம் பண்பாட்டிலும் மரபிலும் வேரூன்றி இருக்கவும் இருமொழிக் கொள்கை நம் குடிமக்களுக்குப் பெரிதும் உதவி வருகிறது.
ஆனால், அதே நேரத்தில் ஆங்கிலம் பேசும் உயர் பிரிவினர்க்கும் தாய்மொழிப் பற்றாளர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த சில தரப்புகள் முற்பட்டன.
இச்சூழலில், இருமொழிக் கொள்கைக்கான உள்ளார்ந்த காரணத்தைப் புரிந்துகொள்ளச் செய்வதிலும் சமூகத்தினரின் கவலைகளுக்குக் குரல் கொடுத்தும் தமிழ் முரசு மீண்டும் ஒரு முக்கியப் பாலமாகச் செயல்பட்டது.
தலையங்கங்கள், வாசகர் கடிதங்கள், கருத்துக் கட்டுரைகள் ஆகியவற்றின்வழி, இருமொழிக் கொள்கை குறித்து விளக்கும் வகையில் ஆக்கமுள்ள கலந்துரையாடல்களை நடத்தி, பிளவுகள் ஆழப்படுவதைத் தவிர்க்க தமிழ் முரசு உதவியது.
அரசாங்கமும் செவிமடுத்தது. தமிழ்மொழிக் கல்விக்கான முதலீடுகள் உயர்த்தப்பட்டன. தமிழ் அல்லாத இந்திய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோர்க்கு அதிக நீக்குப்போக்கு வழங்குவதற்கு தமிழ் அல்லாத இந்திய மொழிகள் திட்டம் போன்ற கல்விப் பாதைகள் உருவாக்கப்பட்டன.
முக்கியமாக, தமிழ் முரசு எழுத்தோடு நின்றுவிடாது செயலிலும் காட்டியது.
1952ல் தொடங்கப்பட்ட மாணவர் முரசு இன்றளவும் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உங்களில் பலர் தமிழ் முரசுடன் வளர்ந்த நினைவு இருக்கலாம் - தமிழ் வகுப்புகளில் வாசித்திருக்கலம், பள்ளி ஒப்படைவுகளின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில், தமிழ் முரசு குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளது.
தமிழ் மட்டும் தெரிந்தோர்க்கு முக்கியமான, சரியான நேரத்தில் பொதுச் சுகாதாரத் தகவல்களை தமிழ் முரசு வழங்கியது. அவர்களில் தமிழ் பேசும் வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் அடங்குவர்.
முன்னணி மருத்துவ நிபுணர்கள் முதல் தொண்டூழியர்கள், சமூகத் தலைவர்கள்வரை - இந்தியச் சமூகத்தில் அறியப்படாத நாயகர்கள் பலரது சேவையையும் அர்ப்பணிப்பையும் தமிழ் முரசு உலகறியச் செய்தது.
அத்தகையோரின் அனுபவக் கதைகள் கைதூக்கிவிடவும் ஒற்றுமைக்கும் உதவின; இந்தியச் சமூகத்தின் பங்களிப்புகளை உறுதிப்படுத்தி, பேரார்வத்தைத் தூண்டின.
மின்னிலக்க ஊடகச் சூழலில் தமிழ் முரசு கண்டுவரும் மேம்பாடு
அண்மையில், இளைய வாசகர்களுக்கும் உகந்த வகையில், பொதுத்தேர்தல் பற்றிய தகவல்களைத் தமிழ் முரசு வழங்கியது.
இளைய வாக்காளர்களின் விருப்பங்களை எடுத்துரைக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன; குறுங்காணொளிகள் வெளியிடப்பட்டன.
முதன்முறை வாக்காளர்களுக்குத் தேர்தல் நடைமுறை குறித்து விளக்கமளிக்கவும் அவர்கள் நமது ஜனநாயகச் செயல்முறையில் தீவிரமாகப் பங்கேற்கவும் அவை உதவின.
தமிழ் முரசின் பின்னணியில் செயல்படும் கடப்பாடுமிக்க அணியினர் இல்லாமல் இந்த நற்செயலைச் செய்திருக்க முடியாது.
இவ்வேளையில், தமிழ் முரசின் முன்னைய ஆசிரியர்களை இன்று நாங்கள் சிறப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அந்நாள், இந்நாள் ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருமே தமிழ் முரசின் பயணத்திற்கு முக்கியமானவர்கள், பாராட்டுக்கு உரியவர்கள்.
எதிர்காலத்தை நோக்கிச் செல்கையில், தகவலறிந்த, ஈடுபாடுகொண்ட குடிமைச் சமூகத்தை வளர்க்க உதவும் வகையில், நீங்கள் சமூகத்திற்குத் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும்படி ஊக்குவிக்கிறேன்.
இது எளிதான செயலன்று. தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்படலாம்; வாசகர்களின் தெரிவுகள் மாறலாம்.
மூத்தோர் உள்ளிட்ட சிங்கப்பூரர்கள் பலரும் இணையம் வழியாக செய்திகளை வாசிக்கவே அதிகம் விரும்பலாம்.
அதே நேரத்தில், உலகெங்கிலும் பெருகிவரும் ‘இலவச’ செய்திகளால் பலர், குறிப்பாக இளையர்கள், களைத்துப்போய் செய்திகள் மீதான ஆர்வத்தை இழக்கும் அபாயமுள்ளது.
வாசகர்களுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ் முரசு புத்தாக்கத்துடன் முயன்று, புதிய படைப்புகளை உருவாக்கி, புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு வருவதைக் கண்டு அகமகிழ்கிறேன்.
முக்கிய விவகாரங்கள் குறித்து நீங்கள் ஏற்பாடு செய்துவரும் இளையர் கருத்தரங்குகள், அடுத்த தலைமுறையினருடன் ஆழமான, அர்த்தமிகு தொடர்புகளை வளர்க்க உங்களுக்கு உதவும்.
2023ல் அறிமுகமான தமிழ் முரசு செயலி பெருவரவேற்பு பெற்றுள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற அனைத்துலக ஊடக விருதுகளில், சிறந்த புதிய மின்னிலக்கப் படைப்புப் பிரிவில் வெள்ளிப் பரிசு வழங்கி அனைத்துலக செய்தி ஊடகச் சங்கம் உங்கள் முயற்சிகளை அங்கீகரித்ததன்மூலம் நீங்கள் மேலும் ஊக்கமடைய வேண்டும்.
சிங்கப்பூரின் விழுமியங்களாகத் திகழும் தாய்மொழி ஊடகங்கள்
நமக்குள்ள சவால்களில் எல்லாம் மிக முக்கியமானது, அருகிவரும் (தாய்)மொழிப் புழக்கம்.
நம் எல்லாத் தாய்மொழி ஊடகங்கள் எதிர்நோக்கும் சவாலும் அதுதான்.
பல்வேறு படைப்புகளின் வழியாக, முக்கியமாக மின்னிலக்கத் தளங்களில், தமிழ் முரசு தொடர்ந்து இளையர்களைச் சென்றுசேர வேண்டியுள்ளது.
இது உங்களது படைப்புகளுடனான ஈடுபாட்டை மேம்படுத்தி தமிழை வாழும் மொழியாகத் தழைக்கச் செய்வதற்கானது.
சரியான திசையில் தமிழ் முரசின் முயற்சிகள் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
‘இளைய தலைமுறை’ என்ற உங்கள் புதிய அடையாளம், பள்ளிப் பாடமாக மட்டுமின்றி, நம் அடையாளம், பண்பாடு, பெருமை ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழும் மொழியாகத் தமிழைப் பிறரிடம் எளிதில் கொண்டுசேர்ப்பதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
விரைவில் இடம்பெறவுள்ள அதன் அதிகாரத்துவ அறிமுகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
புத்தாக்கத்துடன் செயல்படவும் சிங்கப்பூர்த் தமிழர்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிப்பதற்கும் தமிழ் முரசுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.
அதனால்தான், எஸ்பிஎச் மீடியா டிரஸ்டுக்கு நிதியாதரவு அளித்தபோது, தாய்மொழி ஊடகங்களுக்கு ஆதரவு அளித்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்கினோம்.
இறுதியாக, சமூக நிகழ்வுகள், தனிமனிதர்கள் மற்றும் நிறுவனங்களின் சாதனைகள், அவர்கள் கட்டிக்காத்து வரும் விழுமியங்கள் என எதுவானாலும் தமிழ் முரசிடமிருந்து சிங்கப்பூர் இந்தியச் சமூகம் தொடர்ந்து நிறைய எதிர்பார்க்கும்.
தமிழ் முரசும் மற்ற தாய்மொழி ஊடகங்களும் சிங்கப்பூரில் தொடர்ந்து நிலைத்திருப்பது தற்செயலன்று. கவனமாக வடிவமைக்கப்பட்ட கொள்கையையும் சமூகத்தின் ஆதரவையும் உங்களது நீடித்த புத்தாக்க முயற்சியையும் அது எடுத்துக்காட்டுகிறது.
பல்லினப் பண்பாட்டுக் கொள்கைமீதான நம் நாடு கொண்டுள்ள ஆழ்ந்த கடப்பாட்டுடன் அது ஒத்துப்போகிறது.
தமிழ் முரசு போன்ற தாய்மொழி ஊடகங்கள் தொடர்ந்து துடிப்புடன் செயலாற்றி, தாங்கள் சேவையாற்றும் சமூகத்தின் குரலாகத் திகழ வேண்டும். வாசகர்களும் அவற்றின்மீது கவனம் செலுத்தி, ஈடுபாடுகொள்வர் என நம்புகிறேன்.
நன்றி, வணக்கம்.