கரிமநீக்கம் குறித்து பொதுமக்களின் கருத்து நாடப்படுகிறது

2 mins read
e66f76bc-ce56-4f17-9435-8d5261b5bbac
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. இதுதொடர்பாகப் பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கரிமநீக்கத் திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்து நாடப்படுவதாக தேசிய பருவநிலை மாற்றச் செயலகம் அக்டோபர் 8ஆம் தேதியன்று அறிவித்தது.

பருவநிலை தொடர்பான இலக்குகளை எட்ட மூன்று முக்கிய பிரிவுகளில் சிங்கப்பூர் மேம்பட வேண்டும் என்று செயலகம் தெரிவித்துள்ளது.

அனைத்துத் துறைகளிலும் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது, குறைந்த கரிம அளவைக் கொண்ட எதிர்க்காலத்தில் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருத்தல், புதிய பசுமைத் திட்ட வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

இந்த மாற்றங்கள் காரணமாக வாய்ப்புகள் இருப்பது போல சில பின்னடைவுகளும் இருக்கும் என்பதால் நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்து குறைந்த கரிம வெளியேற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குத் தேவையான ஆற்றலைக் கொண்டிருக்க ஊழியர்கள் புதிய திறன்களைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் கரிமநீக்கத் திட்டம் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து செயலகம் கருத்துகளை நாடுகிறது.

2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

இதுதொடர்பாகப் பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

பருவநிலை மாற்றம் தொடர்பாக சிங்கப்பூர் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள், கொள்கைகளை உருவாக்க இருக்கும் நிலையில் பொதுமக்கள் முன்வைக்கும் கருத்துகள் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கருத்து சேகரிப்பை சிங்கப்பூர் இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டில் நடத்தியது.

அதையடுத்து, பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை சிங்கப்பூர் மாற்றி அமைத்தது.

கரிமநீக்கத் திட்டம் தொடர்பான நாடு தழுவிய பங்களிப்பை சிங்கப்பூர் 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்