சிங்கப்பூர் தனது தேசியச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வேளையில், தொழில்நுட்பச் சேவை நிறுவனமான தேசியக் கணினி அமைப்பு (என்சிஎஸ்), நிறுவனங்களின் அன்றாடப் பணிமுறைகளில் ‘ஏஐ’யைப் பயன்படுத்துவதற்கான புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை (ஜூலை 9) நடந்த ‘என்சிஎஸ் இம்பேக்ட் 2026’ வருடாந்தரத் தொழில்நுட்ப மாநாட்டில் அத்திட்டங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன.
என்சிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாம் லியூ மூன்று முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டார்.
முதலாவது, என்சிஎஸ் ஒரு ‘ஏஐ’ சார்ந்த தொழில்நுட்பச் சேவை நிறுவனமாக மாறுவது. என்சிஎஸ் அதன் செயல்பாடுகளையும் நிறுவனக் கட்டமைப்பையும் ‘ஏஐ’க்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து வருகிறது.
இரண்டாவது, என்சிஎஸ் ‘ஏஐ’ வழிகாட்டிக் குறிப்பு வெளியீடு. நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை எளிதாகப் பயன்படுத்துவதற்கு உதவும் ஒரு வழிகாட்டிக் குறிப்பை என்சிஎஸ் வெளியிட்டுள்ளது.
மூன்றாவது, மனித ஆற்றலுக்கு முதன்மை முக்கியத்துவம் தருதல். மனிதர்களின் திறனை மேம்படுத்தும் கருவியாகவே செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும். என்சிஎஸ் அதன் ஊழியர்களுக்கு ‘ஏஐ’ சார்ந்த புதிய திறன்களைக் கற்றுக்கொடுப்பதில் அதிகக் கவனத்தை செலுத்தும்.
“எதிர்காலப் பணியாளர்கள் ‘ஏஐ’ திறன்களிலும் துறைசார் அறிவிலும் வல்லுநர்களாக இருக்க வேண்டும்,” என்று என்சிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாம் லியூ ‘ஏஐ’யின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
என்சிஎஸ் அதன் ‘சன்ஷைன்.ஏஐ’ தளத்தை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்தது.
‘சன்ஷைன்.ஏஐ’ என்பது நிதி, சுகாதாரம், அரசாங்கம் போன்ற துறைகள் சார்ந்த நிறுவனங்களில் ‘ஏஐ’ கருவிகளைப் பாதுகாப்பாகவும் திறம்படவும் நிர்வகிக்க என்சிஎஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் தொகுப்பாகும்.
‘சன்ஷைன்.ஏஐ’ தொகுப்பில் தானியங்கி உதவியாளர்கள், காணொளி நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளன.
என்சிஎஸ், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி போன்ற முக்கியத் துறைகளில் ‘ஏஐ’ தீர்வுகளை நடைமுறைக்குக் கொண்டுவருகிறது .
தேசியச் சுகாதாரக் குழுமத்துடன் இணைந்து அங்க அடையாள முறை, மின்னிலக்க நோயியல், மனிதவள மேம்பாடு போன்ற பிரிவுகளில் ‘ஏஐ’யை என்சிஎஸ் அமல்படுத்தி வருகிறது. இது மருத்துவமனைச் செயல்பாடுகளை எளிதாக்கி நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க உதவுகிறது.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய உதவும் ‘ஏஐ ஆசிரியர்’ வசதியை என்சிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்கொரியாவின் ‘அட்டானமஸ் ஏ2இசட்’ நிறுவனத்துடன் இணைந்து, என்சிஎஸ் அதன் ஊழியர்களுக்காகத் தானியங்கிப் பேருந்துச் சேவையை உருவாக்கி வருகிறது.
மனிதத் திறனை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு துறைகளில் ‘ஏஐ’ பயன்பாட்டை விரிவுபடுத்தும் அதன் முயற்சிகளை என்சிஎஸ் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

